மாஸ்டர் திரைப்படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று மாஸ்டர் படம் குறித்து அதன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி சூசகமாக தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. அதுவும் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்த அதே தனியார் நட்சத்திர விடுதியில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். ஒரே வரிசையில் மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு ஆகிய மூவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் விஜய்யோடு நடித்த அனுபவம் குறித்து மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பலர் பகிர்ந்துக்கொண்டனர். அப்போது மேடையேறிய விஜய் சேதுபதி " ஒவ்வொருவரின் தன்மையையும் அவரிடம் பழகிப் பார்த்தால்தான் தெரியும், அதனை விஜய்யுடன் நடிக்கும்போது தெரிந்துக்கொண்டேன். ஒருநாள் ஏன் சார் பேசமாட்றீங்கனு விஜய்யிடம் கேட்டேன், அப்போது அவர் "நான் ஒரு நல்ல அப்சர்வர்" என்று சொன்னார், அதை நான் பாடமாக எடுத்துக்கொண்டேன். விஜய் மிகவும் அழகாக வெட்கப்படுவார். நான் அவரை வெட்கப்படுவார் என சொன்னதும் வெட்கப்பட்டார். இந்த உலகத்திலேயே ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளை வெட்கப்பட வெச்சிருக்கேன். இது வரலாறு" என்றார்.
மேலும் பேசிய விஜய் சேதுபதி "இந்தப் படத்தில் நான் விஜய்க்கு வில்லன் இல்லை. இதுவொரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட். கொரோனாவால் யாரும் பயப்பட வேண்டாம் தைரியமாக இருங்கள். சாமி பல ஆண்டுகளாக இருக்கிறது எந்த பிரச்னை வந்தாலும் அது தன்னை காப்பாற்றிக் கொள்ளும். ஆனால் தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு மகத்துவம் வாய்ந்த மனிதனை அது இன்னும் படைக்கவில்லை. அதனால் சாமியை காப்பாற்றுகிறேன் என சொல்லும் யாரையும் நம்பாதீர்கள். மதம் என்பது சாமிக்கே பிடிக்காது. ஏன்னா கடவுள்ள எந்த மனிதனாலும் காப்பாத்த முடியாது" என்றார்.