பொங்கலையொட்டி வெளியான மாஸ்டர் படத்தின் டெலிட்டட் சீன்கள் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 64 வது படமான மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் மகேந்திரன் நடித்திருந்தனர்.
தீபாவளி அன்று மாஸ்டர் டீசர் வெளியானது. அதில், கெளரி கிஷன் கையை விஜய் ஆக்ரோஷமாக பிடித்துக்கொண்டு இழுத்து வருவார். ஆனால், படத்தில் அந்த காட்சிகள் இல்லை. படத்தில் நீக்கப்பட்ட அந்தக் காட்சிகள் இன்று அமேசன் ப்ரைமில் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் சவீதா என்ற கேரக்டரில் நடித்துள்ள கெளரி கிஷனை மாணவர்கள் தவறான நோக்கத்தில் தொட்டு வீடியோவை பரப்ப, கெளரி கிஷன் தனது அப்பாவிடம் சொல்லி காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுக்கச் சொல்கிறார். ஆனால், அதனை பிரின்ஸ்பால் வாபஸ் வாங்கச்சொல்ல விஜய் வந்து ’வாபஸ் வாங்கக்கூடாது’ என்று தவறு செய்த மாணவர்களை அடிப்பதோடு காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் வைக்கிறார். இந்த நடவடிக்கையோடு விஜய் பேசும் வசனங்கள் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
அதில், விஜய், ’இன்னும் எத்தனை நாளைக்கு பொண்ணுங்க போடுற ட்ரெஸ்ஸையே குறை சொல்வீங்க? ரேப் மர்டர் செய்யப்பட்ட பெண்களோட ட்ரெஸ் ஸ்கூல் யூனிபார்ம், பர்தா, குழந்தையின் பேம்பர்ஸ் என உள்ளது’ என்கிறார். பெண்கள் ஆடை அரை குறையாக அணிவதால்தான் பாலியல் வன்புணர்வு நடக்கிறது என்று சொல்லும் பிற்போக்குவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதாக அமைந்துள்ளது. இங்கு பிரச்சனை பெண்கள் அணியும் ஆடையில் இல்லை. ஏனென்றால், புடவையில் இருக்கும் பெண்களும் முழு சீருடை அணியும் மாணவிகளும், குழந்தைக்கூட பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறது.
அதனால், பெண்களைப் போகப்பொருளாக பாவிக்கும் சமூகத்தில்தான் மாற்றம் வேண்டும் என்று அழுத்தமாக பேசுகிறார் விஜய். தற்போது, இந்தக் காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாமே? என்று ஏக்கத்துடன் கருத்திட்டு வருகிறார்கள் அனைத்து ரசிகர்களும். படத்தின் நீளம் கருதியே பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஏனெனில் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள 179 நிமிடங்கள் உள்ளது. அதாவது மூன்று மணி நேரம்.