தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் -10 படங்களில் நடிகர் விஜய்யின் படம் எப்போதும் இருக்கும். அந்த வகையில் டாப் -10 வசூல் பட்டியலில் மாஸ்டர் படமும் நுழைந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு (ஜனவரி 13) பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'மாஸ்டர்'. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் 'மாஸ்டர்' டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. விஜய் நடித்த படம் ஒன்று இந்தியில் முதல்முறையாக டப்பிங் ஆகி வெளியாவது இதுவே முதல் முறை.
தொடக்கத்தில் தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கி, பின்பு மத்திய அரசின் அறிவுறுத்தலால் அந்த அனுமதியை ரத்து செய்தது. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், தமிழகத்தில் சுமார் 90% திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியானது. நீண்ட நாட்கள் கழித்து பெரிய நடிகரின் படம் என்பதால், ரசிகர்களும் திரையரங்குகளுக்குப் படையெடுத்தார்கள். அனைத்துத் திரையரங்குகளுமே நிரம்பி வழிந்தன.
தமிழ்நாட்டில் மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால் 5 நாட்களில் ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களை வெளியிடும் நிபுணர் கவுசிக் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 5 நாட்கள் முடிவில் ரூ.5.43 கோடி வசூல் ஈட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் -10 படங்களில் விஜய் படம் எப்போதும் இருக்கும். அந்த வகையில் டாப் -10 வசூல் பட்டியலில் மாஸ்டர் படமும் நுழைந்துள்ளதாக கவுசிக் கூறியுள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சுமார் 90% திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியானது. இதற்கு முன்பு எந்தவொரு தமிழ்ப் படமும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், 5 நாட்கள் முடிவில் ‘மாஸ்டர்’ படம் ஆஸ்திரேலியாவில் ரூ.3.85 கோடியும், நியூசிலாந்தில் ரூ.64.71 லட்சமும் வசூல் ஈட்டியுள்ளதாக மும்பையை சேர்ந்த பிரபல திரைப்பட விமர்சகர் தரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு இருக்கும். தெலுங்கில் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளே ரூ.5.74 கோடியை வசூலித்தது. 5 நாள் முடிவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரூ.20 கோடி, கர்நாடகாவில் ரூ. 14 கோடி, கேரளாவில் ரூ. 7.5 கோடி வசூல் குவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 5 நாட்களிலேயே உலக அளவில் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை செய்து கொண்டிருக்கிறது மாஸ்டர் திரைப்படம். விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை மாஸ்டர் எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.