இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. முன்னதாக திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ட்ரெய்லர் இரு சிறுவர்கள் மூச்சிறைக்க வேலை செய்துகொண்டே பேசுவதில் தொடங்கிறது. அதில், “இந்த காய் செம நம்ம ஊர்ல மட்டும் தான் இருக்கா.. உலகம் முழுசும் இருக்கா? என ஒரு சிறுவன் கேட்க, மற்றொருவரோ, ஏம்ல அப்படி கேக்குற? என எதிர்க்கேள்வி கேட்கிறார். அதற்கு, “வேற எந்த ஊர்லயும் காய் செம இல்லனா.. அந்த ஊர பாத்து ஓடிப்போயிரலாம்ல” என சிறுவன் பேசுவதில் ட்ரைலர் தொடங்குறது.
அடுத்த காட்சி கருப்பு வெள்ளையில், கதவை அடைத்துக் கொண்டு சிறுவன் உள்ளே இருக்க, அவரது தாய் வெளியில் இருந்து கதவைத் திறக்க சொல்கிறார். முடியாது என மறுக்கும் சிறுவம், காய் சுமக்க வாங்கிய அட்வான்ஸை திரும்பிக் கொடுத்து விட்டு வந்தால் தான் திறப்பேன் என கூறுகிறார். அடுத்த காட்சியே கிராம மக்களோடு வேலைக்கு செல்கிறார்.
இடையிடையே பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளும் வருகின்றன. ஒரு கட்டத்தில், முதல் காட்சியில் சிறுவன் கதவை பூட்டிக் கொண்டதுபோல், சிறுவனது தாய் இறுதிக் காட்சியில் கதவை மூடிக் கொள்கிறார். கதவைத் தட்டி ஓய்ந்து போய் சிறுவன் கிணற்றில் விழுவதில் ட்ரைலர் முடிவடைகிறது.
கலையரசன் உள்ளிட்டோர் வாழை தார் சுமக்கும் வேலை செய்கிறார்கள். படத்தில் அம்பேத்கர், மார்க்ஸ், லெனின் படங்கள் இடம்பெற்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியும் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் நடனம் ஆட சென்றதை பெற்றோர் கண்டிப்பதுபோல் ஒரு காட்சி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பலமுறை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, நெல்சன், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்டோர் வீடியோ காணொளி மூலம் வாழ்த்தினர்.
வாழை திரைப்படம் நிச்சயம் உங்களுடைய கண்களின் நீரை வரவழைக்கும். படம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கும் என பலரும் மாரி செல்வராஜை புகழ்ந்தனர்.