”’பேச்சிலர்’ படத்திற்கு கிடைத்த அறிவுரைக்கும் விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி” என்று ‘பேச்சிலர்’ படத்தின் நன்றி தெரிவிப்பு விழாவில் பேசியுள்ளார் நடிகர் ஜி.வி பிரகாஷ்.
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கடந்த 3 ஆம் தேதி ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’ படம் வெளியானது. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைக் குவித்துவருகிறது. இதனையொட்டி, இன்று ‘பேச்சிலர்’ படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட ஜி.வி பிரகாஷ், படத்தை விமர்சித்தவர்களுக்கும் அக்கறையுடன் அறிவுரை கூறியவர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தவறை திருத்திக்கொள்ள முடியும் என்று பேசியுள்ளார். அவர் பேசும்போது,
“ஒரு படத்தின் வெற்றி மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்தப் படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. ’பேச்சிலர்’ வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் டில்லி சார் மற்றும் சக்தி சாரும் தான் காரணம். ஒரு படத்திற்கு இது தான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள் தான்.
இந்தப்படம் ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு பிறகு பெரிய வெற்றி பெற்றுள்ளது. 3 வது வாரம் கடந்து அதற்கான ரசிகர்களை சேர்ந்துள்ளது. நீங்கள் தந்த அறிவுரைக்கும் விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் தரும் கருத்துக்களில் தான் நாங்கள் எங்களை திருத்திக்கொள்கிறோம். பேச்சிலர் பெரிய பாதிப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ் மற்றும் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.