‘ரகிட ரகிட’ பாடல் வெளியான போது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து, அப்பாடல் மீட்டதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்று ’ஜகமே தந்திரம்’ படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ’ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இன்று அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளன. இவற்றில், குறிப்பாக தனுஷ் வரியில் இன்று வெளியாகியுள்ள ‘ஆல ஓல’ பாடலும், விவேக் வரியில் ’தீங்கு தாக்கா’ பாடலும் ஏற்கனவே, வெளியான மூன்று பாடல்களுக்கு சளைத்ததில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக திரும்பத் திரும்ப கேட்கவைக்கின்றன. சந்தோஷ் நாராயணன், அந்தோனி தாசன், ‘தெருக்குரல்’ அறிவு மூவரும் போட்டிப்போட்டுக்கொண்டு குரலில் மிரட்டி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று அனைத்து பாடல்களும் வெளியானது குறித்து, இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,
”’ஜகமே தந்திரம்’ படத்தின் ஒவ்வொரு பாடலையும், ஸ்டுடியோவில் மிகப்பெரும் உழைப்பில், அதிக நேரத்தை செலவளித்து உருவாக்கினோம். இசையில் நான் நினைத்த பல விசயங்களை செய்து பார்க்கும் சுதந்திரம் கிடைத்தது. பாடல் உருவாக்கம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. "ரகிட ரகிட" பாடல் வெளியான போது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
இப்போது, நெட்ஃபிளிக்ஸ் உலகெங்கிலும் மொத்த ஆல்பத்தை வெளிக்கொண்டுவரும் நிலையில் மற்ற பாடல்களையும், அதே போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். இந்தப் படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.