திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசுகிறார்கள், ராஜராஜ சோழனை இந்து மன்னராக மாற்றிவிட்டார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
தமிழ் ஸ்டூடியோ சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் பேச்சின் முழுவிவரம் பின்வருமாறு:
'அசுரன்' எடுப்பதற்கு முன்..
''அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன். அதற்கு அவர், 'தனிமனிதனால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்' என்றார். ஆனால், படம் எடுத்து முடித்த பின் பார்த்த அவர் அதே குற்றச்சாட்டுகளை சொன்னார். காரணம், சினிமாவில் சில விஷயங்களை தவிர்க்க முடியாது
திராவிட சித்தாந்தமும் தமிழ் சினிமாவும்
திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதச்சார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. வெளியில் இருந்து வரும் பல சக்திகளின் அதிகாரத்தை இது தடுக்கும் பக்குவம் கொண்ட மாநிலமாக இருக்கிறது. சினிமாவை அரசியல் மையத்திற்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது.
ராஜராஜ சோழன் இந்து அரசன்?
மக்களுக்காக தான் கலை; மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது.
சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்'' என்றார்.
விவாதப்பொருளான வெற்றிமாறன் பேச்சு
வெற்றி மாறன் பேசிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "வெற்றி மாறன் சொன்னது உண்மைதான். ராஜராஜ சோழனை இந்து மன்னர் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இது வள்ளுவருக்கு காவி பூசியது போல் தான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது, இந்த மதமும் கிடையாது. ராஜராஜ சோழன் சிவனை வழிபட்ட சைவ மரபினர் என்று உலகிற்கே தெரியும். இன்றைய சூழலில் ஆரியம் ராஜராஜ சோழனை தனக்கானவராக மாற்றி வருகிறது. வெற்றிமாறன் இவற்றையெல்லாம், அனுமதிக்க கூடாது என்று சொல்கிறார்'' என்று தெரிவித்தார்.
அதேபோல், வெற்றிமாறன் கருத்துக்கு பாஜக மகளிரணி தேசிய தலைவரும் எம்.எல்.ஏவும் ஆன வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சையில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் ராஜராஜ சோழன். அவருக்கு, 'சிவபாத சேகரன்', 'சோழ நாராயணன்', 'திருமுறை கண்ட சோழன்', 'உலகளந்தான்' என்று பல பெயர்கள் உண்டு. இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து, கம்போடியா என்று உலகின் பல நாடுகளில், சிவலிங்க வழிபாடு வருவதற்கு சோழ அரசர்களே காரணம். சோழ மன்னர்கள் அரசாண்ட இடங்களில் எல்லாம், சிவபெருமானுக்கு மிகப்பெரும் ஆலயத்தை அமைத்தார்கள். கம்போடியாவிலுள்ள இந்து ஆலயம் தான் உலகத்திலேயே மிகப்பெரிய இந்து ஆலயம்.
அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்த மண்ணின் மதமான இந்து மத கலாசாரத்தை, அடையாளங்களை அழிக்க, இங்கு பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சிதான் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நிராகரித்தது உண்மைதான் - காரணத்தை பகிர்ந்த மணிரத்னம்