'சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த கலைஞர்கள்...' - 'நவரசா' அனுபவம் பகிரும் மணிரத்னம்

'சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த கலைஞர்கள்...' - 'நவரசா' அனுபவம் பகிரும் மணிரத்னம்
'சம்பளம் வாங்காமல் பணிபுரிந்த கலைஞர்கள்...' - 'நவரசா' அனுபவம் பகிரும் மணிரத்னம்
Published on

'நவரசா' ஆந்தாலஜி படம் குறித்து அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநரும், இந்தப் படத்தின் தயாரிப்பாளருமான மணிரத்னம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'ஆந்தாலஜி' படமான 'நவரசா' ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒன்பது படங்களின் தலைப்புகளும், புகைப்படங்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்த 'ஆந்தாலஜி' படம் தொடர்பாக மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசனும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தளத்துக்கு பேட்டியளித்துள்ளனர். அதில், இந்த திரைப்படத்தை உருவாக்கத் தூண்டிய விஷயம் குறித்தும், திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் கொரோனா தாக்கம் குறித்தும் விரிவாக பேசியுள்ளனர்.

"நாங்கள் இருவரும் இதற்கு முன்பே ஒரு சில சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் செயலில் ஈடுபட்டு இருந்துள்ளோம். கொரோனா தொற்றுநோய் பரவியபோது, ஜெயேந்திரா என்னை அழைத்து, இந்த விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறினார். அப்படிதான் இந்த யோசனை எங்களுக்கு தோன்றியது. வழக்கமான முறையில் இல்லாமல், உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த போதுமான நிதியை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இதை நாங்கள் பார்த்தோம்.

அந்த யோசனையின்படி, முடிந்தவரை திரைத்துறையை சேர்ந்த பலரை ஈடுபடுத்த நினைத்தோம். ஏனென்றால், திரைத்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் போதுமான நிதி திரட்ட ஒரு கூட்டு முயற்சியாக இதனை செய்ய நாங்கள் விரும்பினோம். ரூ.15 கோடி திரட்டுவது என இலக்கு நிர்ணயித்தோம்.

திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவ நினைத்த காரணம், இந்த துறையில் தான் தினசரி கூலி தொழிலாளர்கள் நிறைய உள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் நாள் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். ஆனால் கொரோனாவால் நீண்ட காலமாக படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் நிறைய தொழிலாளர்கள் கடினமான சூழலில் சிக்கித் தவித்து வந்தனர். எனவேதான் இதுபோன்ற விஷயங்களின் மூலம்தான் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும் என்று இந்த திட்டத்தை தொடங்கினோம்.

எங்கள் நோக்கத்தை புரிந்துகொண்டு இதில் வேலைபார்த்த அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எந்த ஊதியமும் எங்களிடம் இதற்காக வாங்கவில்லை. அவர்களும் உதவ முன்வந்தனர். படப்பிடிப்பின்போது லாக்டவுன் இருந்ததால் நடிகர்கள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகவும் கவலைப்பட வேண்டி இருந்தது. ஒரு முழு மருத்துவக் குழுவை உடன் வைத்துக்கொண்டு பணியாற்றினோம். படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே, படப்பிடிப்புக்கு அனுமதித்தோம்" என்று கூறியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com