நடிகர் ஷாருக்கான், கரீனா கபூர் நடித்து 2011–ம் ஆண்டு வெளியான இந்தி படம் ‘ரா ஒன்’. இந்த படத்தில் இடம்பெற்ற ‘சம்மக் சல்லோ’ பாடல் மெகா ஹிட்டான ஒன்று. இந்த பாடலில் இடம்பெற்ற ’சம்மக் சல்லோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் ஒருவர் தண்டனை அனுபவித்திருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் தானேயை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது, பக்கத்து வீட்டு குப்பைத் தொட்டியை எதிர்பாராமல் தட்டிவிட்டார். ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் அந்தப் பெண்ணை ‘சம்மக் சல்லோ’ என்றாராம்.
இதனால் கடுப்பான அந்தப் பெண், தானே போலீசில் புகார் அளித்தார். போலீசார், ’இதுக்கெல்லாமா வழக்கு?’ என்று அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். அந்த பெண் விடுவதாக இல்லை. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டார். அவர் மனுவை ஏற்ற நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.
‘சம்மக் சல்லோ’ என்பது இந்தி வார்த்தை. இது, இந்தியாவில் பெண்ணை இழிவாகக் கூற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லை. அந்த வார்த்தை எந்தப் பெண்ணுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். எனவே பெண்ணை ‘சம்மக் சல்லோ’ என கூறியவர் நீதிமன்றம் முடியும் வரை இங்கேயே இருந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும். 1 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்’ என்றது தீர்ப்பு. பிறகென்ன, அனுபவித்தார் சம்மக் சல்லோ பார்ட்டி.