ஜேம்ஸ்பாண்ட் படத்தின் படப்பிடிப்பு அரங்கில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தவர் கைது செய்யப்பட்டார்.
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. இயான் ஃபிளமிங்க் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, பாண்ட் கேரக்டர் படங்கள், வசூலிலும் சாதனை படைக்கிறது. இந்த பட வரிசையின் 25 வது படம்
இப்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தை இயக்கிய, டேனி பாய்ல் இயக்குவதாக இருந்தது. அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் கருத்துவேறு ஏற்பட்டதால் விலகினார்.
இதையடுத்து, கேரி ஜோஜி புகுனகா (Cary Joji Fukunaga) இயக்குகிறார். படத்தில் ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக்குடன் ரால்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷைரில் உள்ள பின்வுட் ஸ்டூடியோஸில் நடந்து வருகிறது. படத்துக்காக போடப்பட்ட அரங்கில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது படப்பிடிப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், பீட்டர் ஹார்ட்லி (49) என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே பல பிரச்னைகள். டேனி பாய்ல் விலகியதால் படப்பிடிப்பு முதலில் தாமதமானது. சண்டைக் காட்சியின் போது நடந்த விபத்தில் டேனியல் கிரேக் காயமடைந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்த மாத தொடக்கத்தில் ஆக்ஷன் காட்சியின் போது வெடிபொருள் வெடித்ததில் படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில் இப்போது ரகசிய கேமரா சம்பவம் நடந்துள்ளது.