மம்மூட்டி நடித்துள்ள ’மாமாங்கம்’ படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு இயக்குனர் ராம் வசனம் எழுதியுள்ளார்.
மம்மூட்டி நடிக்கும் வரலாற்று படம், ’மாமாங்கம்’. கேரளாவில் புகழ்பெற்ற ’மாமாங்கம்’ திருவிழாவை மையமாக வைத்து உருவாகும் வரலாற்று படம் இது. 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையை கொண்ட இந்தப் படத்தில், பிராச்சி தேஹ்லன், உன்னி முகுந்தன், பிராச்சி தேசாய், இனியா, அனு சித்தாரா, மாளவிகா மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
முதலில் இந்தப் படத்தை கதாசிரியர் சஜீவ் பிள்ளை இயக்கினார். அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது. பின்னர் அவர் மாற்றப்பட்டு எம்.பத்மகுமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரிக்கும் இந்தப் படம் மலையாளம் தவிர தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் தயாராகி வருகிறது. தமிழ்ப் பதிப்புக்கு இயக்குனர் ராம் வசனம் எழுதியுள்ளார். தமிழ் டப்பிங்கை மம்மூட்டியே பேசுகிறார்.
இதுபற்றி இயக்குனர் பத்மகுமார் பேசும்போது, ’‘மம்மூட்டிக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்பதால் அவரே டப்பிங் பேசியிருக் கிறார். இதற்கு இயக்குனர் ராமுக்கு நன்றி சொல்ல வேண்டும். படத்துக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு சிறப்பானது. தமிழி லும் இந்தப் படம் பேசப்படும்’’ என்றார்.