கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பார்வதி கலந்து கொண்டார். அப்போது, மம்மூட்டி நடிப்பில் வெளியான 'கசாபா' படத்தை பற்றி பேசினார். அந்தப் படத்தில் மம்முட்டி பெண்களுக்கு எதிராக பேசியுள்ள வசனங்கள் வருத்தம் அளிப்பதாக கூறியிருந்தார். மலையாளத்தில் மிகப் பெரிய நடிகராக இருந்துகொண்டு இந்த வயதில் இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்பினார். இவரது பேச்சு மலையாள மம்மூட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பானது.
பார்வதியை வசைச் சொற்களால் மம்மூட்டியின் ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர். மேலும், தாங்கள் விரும்பும் நடிகைரை பற்றி கலங்கமாக பேசியதற்காக சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இத்தனை சர்ச்சையையும் மிக மெளனமாக கவனித்து கொண்டு வந்தார் மம்மூட்டி. அவர் இதுகுறித்து பேசாதது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பினர். பொறுத்து பார்த்த நடிகை பார்வதி, இறுதியில் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இவரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சர்ச்சைகள் நடந்து முடிந்து மூன்று வருடங்களுக்குப் பின்பு இருவரும் முதல்முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இன்று காலை மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர் மம்மூட்டி தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'புழு' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில்தான் நடிகை பார்வதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பெண்களை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால்தான் மகளிர் தினத்தில் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் மூலம் பார்வதியின் `உயரே' படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய ரத்தீனா ஷர்ஷாத், இயக்குனராக அறிமுகமாகிறார்.
மம்மூட்டியின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான 'உண்டா' கதை எழுதிய எழுத்தாளர்தான் இந்தப் படத்துக்கும் கதை எழுதியுள்ளார். இதற்கிடையே, இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் தயாரிக்க இருக்கிறார். அதேபோல் 'பேரன்பு', 'கர்ணன்', 'அச்சம் என்பது மடமையடா' போன்ற படங்களில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.