வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக, மலையாள நடிகர் சங்கம் அபுதாபியில் டிசம்பர் 7 ஆம் தேதி கலைநிகழ்ச்சி நடத்துகிறது. இதில் தமிழ் நடிகர்கள் சிலரும் பங்கேற்கிறார்கள் என்று கூறப்படுகிறதுல்.
கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்தனர். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பி னர். வரலாறு காணாத இயற்கை பேரிடரால் 483 பேர் உயிரிழந்ததாகவும் 140 பேரைக் காணவில்லை என்றும் 14 லட்சத்து 50 ஆயிரத்து 707 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து இருந்ததாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இந்நிலையில் வெள்ள நிவாரணத்துக்காக, அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் அம்மாநில முதலமைச் சரைச் சந்தித்து நிவாரண நிதி வழங்கினர்.
இதற்கிடையே நிவாரண நிதி திரட்ட மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’ முடிவு செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த அம்மாவின் செயற்குழு கூட்டத்தில் கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக விவரங்கள் இறுதிச் செய்யப்பட்டன.
அதன்படி டிசம்பர் 7 ஆம் தேதி அபுதாபியில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், மஞ்சு வாரியர், நிவின் பாலி, துல்கர் சல்மான், பிருத்விராஜ் உட்பட 60 நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
இதுபற்றி ’அம்மா’வின் பொருளாளரும் நடிகருமான ஜகதீஷ் கூறும்போது, ‘இந்த கலை நிகழ்ச்சிகளின் இயக்குனராக பிரபல டைரக்டர் டி.வி.ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஒரு வாரம் ஒத்திகை நடக்க இருக்கிறது. வரும் 28 ஆம் தேதி தொடங்கும் ஒத்திகை தினமும் ஐந்து மணி நேரம் நடக்கும்’ என்றார்.
இந்த கலைநிகழ்ச்சியில் தமிழ் ஹீரோக்கள் சிலரும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.