உலகளவில் எல்லா டான் கதைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட் தான். சின்ன அளவில் குற்றங்கள் செய்துவரும் ஒருவர் வளர்ந்து அமைச்சர்களை ஆட்டுவிக்கும் அளவிற்கானதொரு இடத்திற்கு வந்து சேர்வதே அந்த டெம்ப்ளேட். குற்றங்கள் மீதான போதையே அவை எல்லாவற்றுக்கும் துவக்கம். மாலிக்கும் அதுபோலொரு கதைதான்.
பகத் ஃபாசில், நிமிஷா சஜயன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது மாலிக். பள்ளி ஆசிரியையின் மகனான சுலைமான் கடலோர கிராமத்தில் வளர்கிறார். உள்ளூர் முக்கியஸ்தர் ஒருவரிடம் வேலை செய்யும் சுலைமான் அவரை கொலை செய்துவிட்டு தானே கடத்தல் தொழிலில் நேரடியாக இறங்கி அலி இக்காவாக வளர்ந்து நிற்கிறார்.
படத்தின் முதல் 12 நிமிட காட்சிகள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. புனித பயணத்துக்காக மெக்கா புறப்படும் பகத் ஃபாசில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுகிறார். சிறையில் அடைக்கப்படும் அவரது வாழ்க்கையின் ப்ளாஸ்பேக் காட்சிகள்தான் மாலிக்கின் திரைக்கதை.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ளது பீமாபள்ளி 2009ஆம் ஆண்டு மேமாதம் அங்கு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சில இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் எழுதப்பட்ட ரத்தமும் சதையுமான திரைக்கதைதான் மாலிக்.
டேக் ஆஃப் (Take off), சீ யூ சூன் (See you soon) ஆகிய திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயண் மாலிக்கை இயக்கியிருக்கிறார். ப்ளாஸ்பேக் காட்சிகள் இக்கதையின் வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழியே சொல்லப்படுவதால் காட்சிக் கோர்ப்பில் தெளிவின்மையினை உணரமுடிகிறது. சுலைமான் பகத் ஃபாஸிலின் மனைவி ரோஸ்லினாக நடித்திருக்கிறார் நிமிஷா சஜயன். தனது முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் அவர். தனது முதுமைக்கால காட்சிகளில் நடிப்பில் சற்றே சறுக்கி இருந்தாலும். இளைமைக்கால கடலோரப் பெண்ணாக எக்ஸ்பிரஷன்களில் அசத்தி இருக்கிறார் நிமிஷா.
ஒளிப்பதிவாளர் சானு வர்க்கீஸ் மிகச் சிறப்பானதொரு ஒளிப்பதிவை வழங்கி இருக்கிறார். வன்முறைக்காட்சிகளாகட்டும், காவல்நிலைய காட்சிகளாகட்டும் அனைத்திலும் ஒளிப்பதிவாளரின் உழைப்பை உணர முடிகிறது. மிகச் சில காட்சிகளிலேயே வந்து தலைகாட்டுகிறார் ஜோஜு ஜார்ஜ்.
கெட்டவார்த்தை வசனங்கள், வன்முறைக்காட்சிகள் நிறைந்த இந்த சினிமாவிற்கு எப்படி யூ சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி.? நாயகன், காட்பாதர், வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் பாதிப்புகள் மாலிக்கில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் உள்ள வரிகள்தான் அதற்கு பதில். உலகளவில் எல்லா டான் கதைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட் தான். மாலிக் ரசிக்கலாம்.