மலையாளத்தில் மூத்த இயக்குநரான K.S சேதுமாதவன், இன்று காலை காலமானார். நடிகர் கமல்ஹாசனை, மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இவர், மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த கலைஞர்களில் ஒருவர்.
பல விருதுகளை வென்ற இவர், தமிழில் நடிகர் சிவகுமார் நடிப்பில் மறுபக்கம் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அத்திரைப்படம், புதுமையான மாறுபட்ட படைப்பாக அனைவராலும் கொண்டாடப்பட்டு அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படமாகவும் சாதனை படைத்தது.
இயக்குநர் சேது மறைவு குறித்து நடிகர் சிவகுமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் அவர் கூறிய இரங்கல் செய்தியில், “அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் ‘மறுபக்கம்’. அந்த திரைக்காவியத்தை உருவாக்கியவர் சேது மாதவன். இந்திரா பார்த்தசாரதி அவர்களின் குறுநாவல் ‘உச்சிவெயில்’தான் அந்தப் படத்தின் மூலக்கதை. அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்” என்றார்.
இவரைப்போலவே நடிகர் கமல்ஹாசனும் சேதுமாதவன் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், “காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மூத்த கலைஞர்கள் பலரும் மறைந்த இயக்குநர் சேதுமாதவனுக்கு தங்கள் இரங்கலை பதிவுசெய்து வருகின்றனர்.