மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியான இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், கமல்ஹாசன் இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ‘நாயக்குடு’ என்றப் பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வருகிற 14 ஆம் தேதி ஆந்திராவில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் 465-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், இந்தியாவின் பிற பகுதிகள் முழுவதும் 250-க்கும் மேலான திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறப்பதை முன்னிட்டு நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.