தனுஸ்ரீ புகார் கொடுத்தால் நேர்மையான விசாரணை: அமைச்சர் உறுதி!

தனுஸ்ரீ புகார் கொடுத்தால் நேர்மையான விசாரணை: அமைச்சர் உறுதி!
தனுஸ்ரீ புகார் கொடுத்தால் நேர்மையான விசாரணை: அமைச்சர் உறுதி!
Published on

’நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கொடுத்தால் நேர்மையான விசாரணை நடத்தப்படும்’ என்று மகாராஷ்ட்ர மாநில அமைச்சர் தீபக் கேசர்கார் தெரிவித்துள்ளார். 

தமிழில் ’பொம்மலாட்டம்’, ’காலா’ படங்களில் நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். இவர் மீது, நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இவர், தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். இது பரபரப்பை கிளப்பியது.

தனுஸ்ரீயின் புகாரை மறுத்த நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர் வேன் என்று கூறியிருந்தார். அதன்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்நிலையில், சல்மான் கான் தொகுத்து வழங்கும் ’பிக்பாஸ் சீசன் 12’-ல் தனுஸ்ரீ, பங்கேற்க இருப்பதாகவும் அதில் அவர் கலந்துகொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சி எச்சரித் துள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சி, பிக்பாஸ் 12 நிகழ்ச்சியை நடத்தும் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதை அடுத்து மும்பை போலீஸ், தனுஸ்ரீ-க்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

இதற்கிடையே நானா படேகர் தூண்டுதல் பேரில் நவநிர்மாண் சேனா கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறினார் தனுஸ்ரீ. இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநில பீட் மாவட்ட நவநிர்மாண் தலைவவர் சுமந்த் தாஸ் என்பவர், கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மீது தனுஸ்ரீ அவதூறு பரப்புவதாக கூறி காஜி காவல் நிலையத்தில் தனுஸ்ரீ மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் தீபக் கேசர்கார் கூறும்போது, ‘நானா படேகர் மீது தனுஸ்ரீ புகார் அளித்தால் நேர்மையான வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், அமைச்சர் கேசர்கார், ‘நானா படேகர் நடிகர் மட்டுமல்ல, சமூக ஆர்வலர். மாநிலத்துக்காக பல்வேறு நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவரை போன்றவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com