இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளிவந்தது மகாராஜா திரைப்படம். ஒரு குப்பைத்தொட்டியை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு படத்தை கையாண்ட இயக்குநர் நித்திலன், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து கிளைமேக்ஸில் ரசிகர்கள் எல்லோருடைய மனதையும் வென்றிருந்தார். படத்தில் நடத்திருந்த விஜய் சேதுபதி, நட்டி, முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன், பாரதிராஜா, மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி உள்ளிட்ட எல்லோரும் தங்களுடைய சிறந்த நடிப்பை கொடுத்து படத்திற்கு உயிரூட்டியிருந்தனர்.
திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்த மகாராஜா திரைப்படம், ஓடிடி-ல் வெளியான பிறகு அதிகப்படியானவர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் படைத்து அசத்தியது.
இந்நிலையில், மெல்போர்ன் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட மகாராஜா திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான விருது வென்று மிரட்டியுள்ளது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்றபிறகு, மெல்போர்னில் நடைபெற்ற திரைப்பட விழாவில் (Indian Film Festival of Melbourne) திரையிடப்பட்டது. அதில் சிறந்த இயக்குநருக்கான விருதுப்பட்டியலில் அதிகப்படியான விருப்பத்தேர்வாக மகாராஜா இருந்தநிலையில், விருதை வென்று அசத்தியுள்ளது.
இந்தப் பிரிவில் இம்தியாஸ் அலி, கபீர் கான், கரண் ஜோஹர், ராஜ்குமார் ஹிரானி, விது வினோத் சோப்ரா, ராகுல் சதாசிவன் ஆகியோர் சிறந்த இயக்குநருக்கான பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஜா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை அனைத்து தரப்பினரும் பாராட்டிய நிலையில், சமீபத்தில் விஜய் படத்தை பார்த்துவிட்டு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதை இயக்குநரும் பதிவாக பதிவிட்டிருந்தார்.
அதேவேளையில் இயக்குநர் நித்திலன் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பே, அவருடைய திறமை குறித்து பேசியிருந்த உலகநாயகன் கமல்ஹாசனின் வீடியோவும் இணையத்தில் வைரலானது.
நித்திலன் சுவாமிநாதன் முன்னதாக நாளைய இயக்குநர் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இதில் இறுதிச் சுற்றில் இவர் இயக்கிய “புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்” என்ற படம் நாளைய இயக்குநர் டைட்டில் பரிசை வென்றது. இந்த விருதை அவருக்கு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இருவரும் இணைந்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.