இசை ராஜாங்கத்தின் இணையில்லா சக்ரவர்த்தி! - ‘இளையராஜா 80’ பிறந்ததினப் பகிர்வு #HBDIlaiyaraaja

இன்று ராஜாவுக்கு 80 வயது! 47 ஆண்டுகள் கடந்தும், முதல் படத்துக்கு இசையமைக்கும் அதே அர்ப்பணிப்புணர்வோடு ஹார்மோனியத்தில் கைவைக்கும் இசைக்கலைஞன். கறுப்பு வெள்ளை காலம் தொட்டு ஓடிடி திரைகள் வரை இயக்குநர்களின் கதைக்கு இசையால் ஆன்மா கொடுக்கும் மாயக்காரன்.
Ilayaraja
Ilayaraja Raja
Published on
"அது டான்ஸ் நம்பர் இல்ல... தாலாட்டுப் பாடல்!"

மேடைகளில் பாடல் நிகழ்வுகளில் இளையராஜா ஒரு சில பெட்டிகளின் பூட்டுகளைச் சட்டெனத் திறந்து காட்டி, தன் ரசிகர்களின் உற்சாகத்தை ரசிப்பது வழக்கம். அப்படி, சிங்கப்பூரில் ஒரு மேடையில், ஒரு ரகசியத்தை உடைத்தார். 

" 'நிலா அது வானத்து மேல'- அப்டினு நீங்கள்லாம் கொண்டாடி குதிச்சு ஆட்டம் போட்டுட்டிருக்கீங்களே... அது ஆக்சுவலா ஒரு தாலாட்டா போட்ட மெட்டு"  


என்று சொல்லி, அதை... "தனானன தானன னானா.. தனானன தானன னானா.. தன்னானன தானன னானா... ஆராரோ... ஓ ஆராரோ.."  தாலாட்டாகவே பாடிக்காட்டினார். அட.. இதில் இப்படி ஒரு சங்கதி இருக்கிறதாவென பலரும் நினைத்துக் கொண்டாட.. எங்கோ இதைக் கேட்டுக் கொண்டிருந்த தனுஷ் இதற்கு  வரி வடிவம் கொடுத்தார். அந்த மெட்டுக்கு, 2022ல், தீவுத்திடலில் நடைபெற்ற  'ராக் வித் ராஜா' கான்செர்ட்டில் வரிகளெழுதிப் பாடினார், தனுஷ்.

இளையராஜாவுடன் தனுஷ்
இளையராஜாவுடன் தனுஷ்

மிக விரைவில் அது வெளியாகும் என்பதிருக்கட்டும். இப்போது சில காலக்கணக்குகளைப் பார்ப்போம்.

நாயகன் வெளியாகும்போது,  தனுஷுக்கு வயது நாலு. ராஜாவுக்கு.. வயதை விடுங்கள்.. அது ராஜாவின் 400வது படம்! 

தனக்கு நான்கு வயதாகும்போது வெளியாகும் பாடலுக்கு, தான் 33 வயதானபிறகு, தன் முன் நிற்கும் 79 வயதான, அந்தப் படைப்பின் பிரம்மாவுக்கு பாடிக்காட்டுகிறார் தனுஷ்! 

நேற்று இல்லை... நாளை இல்லை.. எப்பவும் அவர் ராஜாதானே!?

"அவ்ளோதாம்பா ராஜா.. யங்ஸ்டர்ஸுக்கு ராஜாவப் பிடிக்கல!"

மேற்கண்ட வசனம் வெகுவாக பேசப்பட்ட நாட்களில்தான் 'நீதானே என் பொன் வசந்தம்' ரிலீஸாகிறது. ஏதோவொரு கூட்டத்தில் என்னருகிலிருந்த இளைஞன், "என்னோடு வா வா என்று" என்று முணுமுணுத்தான். நான் சட்டென்று திரும்ப "நீதானே என் பொன் வசந்தம் அங்கிள்...  நான் டி நகர் ஏ.ஜி.எஸ் ல வொர்க பண்றேன்.. இந்தப் படத்துப் பாட்டெல்லாம் கேட்டு பித்துப் பிடிச்சுப் போயிருக்கேன்" என்றான். புதுப்பேட்டை அழகம்பெருமாளாய் மாறி "என்னடாப்பா வயசு ஒனக்கு" என்றதுக்கு "23" என்றான்.

Ilayaraja with Mother
Ilayaraja with Mother

நேற்று youtube-ல் லிடியன் நாதஸ்வரம் ஒரு ஹோட்டல் வரவேற்பரை பியானோவில்,  'சற்று முன்பு பார்த்த' பாடலை வாசித்தார். "இந்தப் பாட்டோட piano arragementsலாம்வே ற லெவல்... பாட்டோட mood, distrurbed mood அப்டின்றதால, cards arragements-ம் disturbedஆ வெச்சிருப்பார்" என்று சொல்லி விரல்கள் அங்கே இங்கே தவ்வ, வாசித்துக் காட்டினார் லிடியன். அந்த ஏஜிஎஸ் இளைஞனை நினைத்துக்கொண்டேன்.  

இமயம் முதல் குமரி வரை இதயங்களில் இடம்பிடிப்பதெல்லாம் சும்மாவா பின்ன! 

"இனியெல்லாம் சுகமே..."

கௌதம் மேனன், ராஜாவிடம் ஒரு சந்திப்பில் சொல்கிறார்: "என் க்ரூப்... அல்லது என்னவிட சின்ன வயசுப் பசங்க பாட்டு ம்யூசிக்னு சேர்ந்தாங்கன்னா 10-20 பாட்டுகள் ராஜா சார் பாட்டுகளாத்தான் இருக்கும்.. அதுல, 'உறவுகள் தொடர்கதை; நிச்சயம் இருக்கும்.." 

ராஜா: "உறவுகள் தொடர்கதை...' என்று ஆரம்பித்து... "இப்ப ஞாபகமில்ல..."

கௌதம் மேனன்: "லிரிக் ஞாகமில்லன்னா பரவால்ல சார்.. அந்த ட்யூன்.. எனக்கு ஆறுதலா இருக்கும்.. என்னை மாதிரி பல பேருக்கு ஆறுதலா இருக்கும்.."

ராஜா... ஹார்மோனியத்தில் கை வைத்து மெட்டை முணுமுணுக்கிறார்..  கங்கை அமரன் வரிகள் நமக்குள் பூக்கின்றன.. 

இளையராஜாவுடன் கவுதம் வாசுதேவ் மேனன்
இளையராஜாவுடன் கவுதம் வாசுதேவ் மேனன்

'உன் நெஞ்சிலே பாரம்  உனக்காகவே நானும் 
சுமைதாங்கியாய் தாங்குவேன்... 
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்... 
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் 
வெண்மேகமே... புது அழகிலே நானும் இணையலாம்..'

அவர் மெட்டைத்தான் வாசிக்கிறார். ஆனால் நம் மனது வரிகளைப் பாடுகிறது..

ஊரெல்லாம் அவர் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது இல்லையா? 

"கையென்றே செங்காந்தள் மலரை..."

ராஜாவின் ஒரே பாடல்.. ஒரே ட்யூன் பற்பல வடிவங்களில் பல மொழிகளில் வெளிவந்துள்ளது என்பது ராஜா ரசிகர்கள் எல்லாரும் அறிந்த ஒன்று...

பாலுமகேந்திரா முதலில் ராஜாவின் ஹார்மோனியத்திலிருந்து அந்த டியூனைக் கேட்டபோது, தன் படத்துக்கு அது நிச்சயம் வேண்டுமென்கிறார். அதை தன் குரலில் பாடவேண்டும் என்று வைத்திருந்ததாகக் கூறுகிறார் ராஜா... மலையாளத்தில், 'ஓலங்கள்' படத்தின் சூழலுக்கு நாயகி பாடும் சூழலுக்கு இந்த டியூன்தான் வேண்டுமென்று அடம்பிடித்து வாங்கிக்கொள்கிறார் பாலு மகேந்திரா.  அந்தப் படத்தில் 'தும்பி வா' என்று எஸ்.ஜானகி குரலில் வருகிறது பாடல்.   

இளையராஜா - பால்மகேந்திரா
இளையராஜா - பால்மகேந்திரா

தமிழில் 'ஆட்டோ ராஜா'வில் புலமைப்பித்தன் வரிகளில் 'சங்கத்தில் பாடாத கவிதை' என்று எஸ்.ஜானகியுடனிணைந்து அந்தப் பாடலை பாடி தன்  தாகத்தை தணித்துக் கொள்கிறார் ராஜா. (சிலருக்கு ஆச்சர்யமான ஒரு தகவல்: ஆட்டோராஜா படத்தில் இந்த ஒரு பாடல் மட்டும்தான் இளையராஜா. பிற பாடல்களெல்லாம் இசை சங்கர் கணேஷ்!)

பிறகு, அந்த மெட்டு தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மொழிகளுக்குப் போய் வந்த பாடல்... இந்தியிலே இரண்டு வெர்ஷனெல்லாம் கூட உண்டு.. ஏன்.. 'சங்கத்தில் பாடாத கவிதை' என்று ராஜாவின் குரலில் மட்டுமில்லாமல்... 'நீர் வீழ்ச்சி தீமூட்டுதே... தீகூட குளிர்காயுதே' என்று எஸ்.ஜானகியின் குரலில் தமிழிலேயே இன்னொரு வெர்ஷனும் உண்டு! 

2011-ல் 'என்றென்றும் ராஜா; கான்செர்ட்டில் இந்தப் பாடலை 'தம் தம் தம்.. தம்தம்த தததம்ம்" என்று ஆர்கஸ்ட்ரைசேஷனாக மட்டும் குழுவினர் வாசிக்க, ராக ஆலாபனையில் பாடிக் காட்டுகிறார் ராஜா. 30 வருடங்களுக்கு முன்பு வந்த அந்த மெட்டுக்கு, ஒட்டுமொத்தக் கூட்டமும் மயங்கி தலையசைத்து கைதட்டலால் அவரை அள்ளி ஆர்ப்பரிக்கிறது. 

இசைக்கென இசைகிற ரசிகர்கள் ராஜ்ஜியம்... படைக்கிறார்ல அவர்? 

மடிமீது தூங்க... மறுநாளில் ஏங்க..

ஒரு சில தினங்களுக்கு முன்... ஆம்.. ஒரு மாதம் கூட ஆகவில்லை - ஒரு வெப் சீரிஸ் ரிலீஸாகிறது. மாடர்ன் லவ் சென்னை. 

ஆறு எபிசோடுகள். ஆறில் ஒன்றுக்கு இசை... ஷான் ரோல்டன், வயது 35. இன்னொன்று ஜிவி பிரகாஷ் குமார்.... 35. மூன்றாவதும் டைட்டிலும்.. யுவன்...  43. ஆறில் மீதம் மூன்று எபிசோடுகளுக்கு இசையமைத்தது.... 80 வயதுக்கார இளைஞன்.. இளையராஜா! இதைவிட ராஜாவைப் பற்றிப் பேச.. எழுத என்ன இருக்கிறது!

நீதானே என் பொன்வசந்தம் பாடல்தான் இதற்கு பதில்... 

வெயிலா மழையா
வலியா சுகமா... எது நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்


நா. முத்துக்குமாரின் மேற்கண்ட வரிகளை மீண்டுமொரு முறை வாசியுங்கள்.. அந்த வரிகள்.. கதையின் நாயகனுக்கு மட்டுமல்ல. நம் இசைநாயகனான. ராஜாவுக்கும்தான்...

ராஜா..  நீதானே... எங்கள் பொன்வசந்தம்! 

வாழ்வென்ன இசையென்ன உனக்கு ஒன்றாகும்!

ஆயிரமாவது படம், தாரை தப்பட்டை. அந்தப் படத்தின் சில பாடல் இசையமைப்பின்போது பாலா இருக்கவில்லை என்று பதிவு செய்கிறார் ராஜா. ஒரு பாடலை உருவாக்கிக்கொண்டிருக்கும்போது பாலா வருகிறார். இசைக்கலைஞன் சாமிப்புலவனாய் நடித்த ஜி.எம்.குமார் பலர் முன் பாடுவது போன்ற அந்தச் சூழலுக்கு தான் அமைத்த மெட்டை வாசித்துக் காட்டிய ராஜா, அவரே வரிகளையும் எழுதி பாடியும் காட்டுகிறார். கண்மூடிக் கேட்டுக்கொண்டிருந்த பாலாவின் கண்களில் கண்ணீர் வழிகிறது.   

நீ விரும்பும் நேரம் உனக்கிது வேண்டும்..
உன் கவனம் யாவும் பொழுது போக, தீரும்!
சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்
வாழ்வென்ன இசையென்ன எனக்கு ஒன்றாகும்!

ராஜாவுக்கான வரிகளை பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்த வரிகள் ராஜா, தனக்கே தனக்காய் எழுதிக் கொண்டதாய் தோன்றும் எனக்கு! 

அவருக்கு இசைதான் வாழ்வு... அவர் இசைதான் நமக்கும் வாழ்வு

பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் “நீங்கள் எப்படி நினைவுகொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்லியிருப்பார் ராஜா:

“அது உங்கள் பாடு. வந்த சுவடு தெரியாமல் சென்று விடவே விருப்பம் எனக்கு!”

இன்னும் பலநூறாண்டுகள் கழித்தும் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இசைச் சுவடுகளை தமிழர்களின் இதயங்களில் பதித்துவிட்டு, இப்படிச் சொன்னால் எப்படி! வாய்ப்பில்ல ராஜா... வாய்ப்பே இல்ல!

இன்னுமொரு நூறாண்டு இரும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com