லைகா உடனான கடன் பற்றிய வழக்கு: “இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் இல்ல” - விஷாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி!

லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் வெற்று பேப்பரில் தன்னிடம் கையெழுத்து பெற்றுவிட்டனர் எனவும் நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் - விஷால்
சென்னை உயர்நீதிமன்றம் - விஷால்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - சுப்பையா

'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை விஷால் முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டுமென ஒப்பந்தமும் போடப்பட்டது.

pt

ஆனால் இதை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக அறிவித்தது விஷால் பட நிறுவனம். இதற்கு எதிராக லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக, நீதிபதி P.T. ஆஷா முன் நேற்று நடந்தது. அதில் நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். அப்போது லைகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி, விஷாலிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், “இந்த ஒப்பந்தம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றனர்” எனக் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, “நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்...? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் அல்ல. கவனமாக பதிலளியுங்கள்” என அறிவுறுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றம் - விஷால்
கேரளா நிலச்சரிவு | பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் கொடுக்க முன்வந்த இளம்தாய்!

தொடர்ந்து, “சண்டக்கோழி- 2 படம் வெளியாவதற்கு 10 நாட்கள் முன் திருப்பித் தந்துவிடுவதாக கூறி லைகாவிடம் பணம் வாங்குனீர்களா?” என்று விஷாலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு,

“பாஸ்...” (Pass... அதாவது கேள்விக்கு பதிலளிக்காமல் பாஸ் செய்வதாக கூறும் நோக்கில்) எனக்கூறினார் விஷால். இதனால் நீதிபதி, “இது போன்று பாஸ் என்றெல்லாம் இங்கு சொல்லக்கூடாது... ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

இதையடுத்து, “லைகாவை தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியிருக்கிறார்களா?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆம் என பதிலளித்த விஷால், “லைகா நிறுவனத்தால்தான் அந்த கடன் வாங்க நேர்ந்தது” எனக் கூறினார். இதையடுத்து குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்த நீதிபதி, இன்றும் விஷால் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். விஷால் இன்றும் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com