‘மிஸ்டர் கூல் கேப்டன்’ என்று அழைக்கப்படும் தோனி, அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற நிலையில், உள்ளூர் போட்டியான ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்படனாகவும் அவர் உள்ளார். கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான துறைகளில் முதலீடு செய்து பணம் சம்பாதித்தும் வருகிறார் தோனி. விவசாயம் செய்வது, பள்ளிக் கூடங்கள் அமைத்துள்ளது, ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்வது, விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் தமிழரான ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் தோனி நடித்துள்ளார். இதனை தோனி என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி கூறியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் தோனி என்டெர்டெயின்மெண்ட் சார்பில் நயன்தாராவை வைத்து தமிழ் படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியானநிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.
இதன்பிறகு நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் கசிந்தது. நடிகர் விஜய்யை வைத்து தமிழிலும், மகேஷ் பாபு வைத்து தெலுங்கிலும், பிரித்விராஜை வைத்து மலையாளத்திலும், கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்திலும் படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிக்க, அந்தப் படத்தை தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது இந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு நாளை மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு, நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புடன் நாளையே படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் யார் அந்த நடிகர்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.