பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கோமாளி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ‘லவ் டுடே’. கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், எதிர்பார்ப்பை மீறி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சுமார் 5 முதல் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம், 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து, கடந்த 2022-ம் ஆண்டில் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் இடம் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் படம், அங்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அஜித்தின் ‘துணிவு’ படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் இந்தி ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தென்னிந்தியப் படங்களை அதிகளவில் ரீமேக் செய்து நடிக்கும், பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் இந்தப் படத்தை வருண் தவானின் தந்தையும், பிரபல இயக்குநருமான டேவிட் தவானே இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.