மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ முதலிய ஹிட் திரைப்படங்களை கொடுத்து திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லாமல் இந்தியா சினிமாவிற்கே புதிய விசயமாக அவர் கொண்டுவந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆனது, இந்திய ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) என்பதை வெறும் பேச்சோடு நிறுத்திவிடமால், கைதி, விக்ரம் மற்றும் லியோ என மூன்று திரைப்படங்களையும் அவருடைய சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்குள் இணைத்து கொண்டுவந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், அவருடைய அடுத்த படமான ‘கூலி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிவருகிறார்.
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் சேர்ந்து நடித்து வருகிறார். உடன் நாகர்ஜுனா, உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் மற்றும் ஸ்ருதிஹாசன் முதலிய பெரிய பெயர்கள் படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், லோகேஷ் கனகராஜ் படங்கள்குறித்து பேசியிருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பவன் கல்யாண், “நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் நடிப்பு மிகவும் பிடிக்கும், அதேபோல மணிரத்னத்தின் படங்களும் பிடிக்கும். சமீபத்தில் லியோ படத்தை பார்த்தேன். அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பான வேலை செய்திருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
அதை பார்த்த லோகேஷ் கனகராஜ், பவன் கல்யாணிற்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது பவன் கல்யாண் சார். என் வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரிய நன்றி சார்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல யோகி பாபுவும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பவன் கல்யாணிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.