லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. LCU-ல் உருவான படம் பெரும் எதிர்பார்ப்பு இடையில் நல்ல ஓபனிங் உடன் வெளியானாலும், படத்தின் 2ம் பாதி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. என்னதான் கலவையான விமர்சனங்கள் என்றாலும் படத்தின் வசூல் குறையவில்லை.
600 கோடிக்கும் அதிகமாக படம் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. நடப்பாண்டில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையையும் தட்டித்தூக்கியது லியோ.
படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த லோகேஷ், ‘இரண்டாம் பாதி ஃபேக் ஆகக்கூட இருக்கலாம் அல்லவா’ என்று கூறியிருந்தார். அதற்கேற்றபடி மன்சூர் அலிகான் ஃப்ளாஷ்பேக் ஸ்டோரி சொன்னபோது எடுக்கப்பட்ட காட்சியும் தனியாக வெளியானது.
இதற்கிடையே ‘படத்தின் மேக்கிங் அற்புதமாக இருக்கிறது, கதை சொல்வதில்தான் லோகேஷ் கோட்டைவிட்டுள்ளார்’ என்று சிலர் கூறினாலும், அத்தனையையும் தாண்டி ஒற்றை ஆளாக பார்த்திபனாக படத்தை தாங்கிப்பிடித்திருந்தார் நடிகர் விஜய். அவரது கேரியரிலேயே ஒன் ஆஃப் தி பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் என்றெல்லாம் பாராட்டப்பட்டார்.
இந்த நிலையில், லியோ படத்தின் தான் செய்த ஒரு தவறை இனி செய்யவே மாட்டேன் என்று நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் லோகேஷ். தன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஃபைட் கிளப் படம் தொடர்பான கோபிநாத் உடனான நேர்காணலில் பேசிய லோகேஷ், “இனி ரிலீஸ் தேதியைச் சொல்லாமல் படம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இது நானே எனக்கு வகுத்துக்கொண்ட கொள்கை. ஃப்ரொடக்ஷனுக்கெல்லாம் நேரம் தேவைப்படுகிறது. கடைசியாக லியோ படத்தில் 2ம் பாதியில் சில பிரச்னைகள் இருப்பதாக கூறுகின்றனர். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இனி மிகவும் கவனமாக இருப்பேன். இது மாதிரி நடக்காது. ரிலீஸ் தேதி அழுத்தம் பெரும் பிரச்னையாக இருக்கிறது. லியோவில் ரிலீஸ் தேதி நானே கேட்டு வாங்கிக்கொண்டதுதான். வேண்டாம் என்று சொல்லியிருந்தால் யாரும் முடியாது என சொல்லியிருக்க முடியாது. துணிச்சலாக ஓகே சொல்லிவிட்டு இறங்கியதுதான். ஆனால், ஒரு பெரிய படத்தை எடுக்கும்போது, 10 மாதத்தில் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று வேலை செய்யும்போது, திரும்பி பார்த்தால் என்ன நடந்ததென்றே தெரியாது. அவ்வளவு வேகம் தேவையில்லை என்று தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
லியோ வெற்றிக்கொண்டாட்டத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் போதே ரிலீஸ் தேதியை அறிவித்ததும், சொன்ன தேதியில் படத்தை முடித்து வெளியிட்டதும் மெச்சும்படியாக இருந்தது. ஆனால், தற்போது லோகேஷ் கனகராஜ் கூறுவதுபோன்று, பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும்போது, ரிலீஸ் தேதி, நேரமின்மை போன்ற பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.