ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்பதுதான் நாம் அனைவரும் கொண்டாடும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இயற்பெயர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் எஸ்.பி. சம்பமூர்த்தி - சகுந்தலாமா என்பவர்களுக்கு மகனாக ஜூன் மாதம் 4 ஆம் தேதி 1946 இல் பிறந்தார். அவரது தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞராக இருந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாடகர் எஸ்.பி. சைலாஜா உட்பட இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உள்ளனர்.
இசையின் மீது அபார ஞானமும் விருப்பமும் இருந்தாலும் பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆந்திரம் மாநிலம் அனந்தபூரில் உள்ள ஜே.என்.டி.யூ பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இவர், டைபாய்டு காய்ச்சல் காரணமாக பாதியில் கைவிட்டு சென்னையில் பொறியியல் படிப்பினை தொடர்ந்தார். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே பாடல் போட்டிகளில் பங்குபெற்று பல விருதுகளை வென்றார். 1964 ஆம் ஆண்டில் சென்னையில் தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அமெச்சூர் பாடகர்களுக்கான இசை போட்டியில் முதல் பரிசை வென்றார்.
1960-களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் முதலில் பாடியது "சாந்தி நிலையம்" படத்தில் வரும் 'இயற்கையெனும் இளையகன்னி' என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த "அடிமைப் பெண்" திரைப்படத்தில் பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் வெளிவந்தது.