"நடிகர்களின் மகன்கள் நடிகர்கள் ஆவதால் அவர்களை தொடர்பு கொள்வதே மிகவும் கடினமாக உள்ளது'' என முன்னணி இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிகராக அறிமுகமாகும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார், பாண்டிராஜ், யுகி சேது, நடிகர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய ஆர்.வி.உதயகுமார், ''இந்தப் படம் மூலம் தங்கர்பச்சான் மகன் நடிகராக அறிமுகமாகிறார். அடுத்து விக்ரமனின் மகன் அறிமுகமாகிறார். இவ்வாறு இயக்குநர்களின் மகன்கள் நடிகர்களாவது முக்கியம். ஏனெனில், நடிகர்கள் மகன்கள் நடிகராவதால் அவர்களை தொடர்பு கொள்வதே மிகவும் கடினமாக உள்ளது. ஒருவரை தொடர்புகொள்ள வேண்டும் என்றால் யார் யாரிடமோ பேச வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே இயக்குநர்கள் மகன்கள் நடிகர்களானால்தான் நல்லது'' எனக் கூறினார். மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் வாழ்த்துகளை கூறினர்.
'டக்கு முக்கு டிக்கு தாளம்' பாடல் வெளியீட்டு விழாவில் இறுதியாக பேசிய தங்கர் பச்சான், ''விஜித் பச்சான் பலகட்ட பயிற்சி எடுத்துக்கொண்டு நடிக்க வந்துள்ளார். குறிப்பாக நான்கு பேர் இருந்தாலே அவர் பேச பயப்படுவார். எனவே உளவியல் ஆலோசனை எடுத்துக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். இதேபோன்று அனைத்து நடிகர்களுக்கும் நிச்சயம் உளவியல் ஆலோசனை தேவை. அதை நடிகர்கள் பின்பற்ற வேண்டும். அத்துடன் பாடல்கள்தான் தமிழை வளர்க்க உதவின. அந்த பாடல்களை இசையமப்பதில் தரண் சிறந்து விளங்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்ததற்கு தரணின் இசை முக்கியமானது'' என்றார்.
இதையும் படிக்க: “நான் அவர் இல்லை”- குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஊடகவியலாளர் அமீர் கான்