முன்னணி நடிகர்கள் தங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று துணை நடிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்பில், “அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அதிக ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது துணை நடிகர்கள் ஒரு படப்பிடிப்பிற்கு கூட்டத்திற்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் தான் வேலை கிடைக்கிறது. அதுவும் தற்போதெல்லாம் சுமார் 10 ஆண்டு காலமாக வெளியூர் படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் செல்வது குறைவாகவே இருந்து வருகிறது என்பது நமது அனைத்து மூத்த நடிகர்களும் அறிந்த விஷயமே.
அதேபோல் ஒருநாள் ஊதியமாக ரூபாய் 450 சம்பளம் ஆகவும் பேட்டா வாக ரூபாய் நூறும் பெற்று வருகிறார்கள். இதில் நடிகர் சங்கத்திற்கு டோக்கன் காசாக ரூபாய் பதினைந்து செலுத்தி வருகிறார்கள். சிலர் நினைக்கலாம் அப்படி என்றால் வேறு வேலைக்கு செல்லலாமே என்று. இவர்கள் அனைவரும் தங்களது கனவாக சுமார் 40 ஆண்டு காலம் 50 ஆண்டு காலம் நாடகத் துறையிலும் சினிமாத் துறையிலும் என்றாவது வெற்றி பெற்று விடுவோம் என்ற லட்சிய பயணத்தை வாழ்க்கையை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 2 ஆண்டு காலமாக சங்கம் வழக்கில் உள்ளதால் அந்தக் கட்டிடத்தை கட்டி முடித்து இருந்தால்கூட அதிலிருந்து ஏதாவது வருமானம் பெற்று அதன் மூலம் உறுப்பினர்கள் பயன் பெற்று இருப்பர். இப்பொழுது இரண்டு ஆண்டுகாலமாக கொரானா பேரிடர்.. தொற்றால்.. உயிர் இழப்பதை விட வாடகை கொடுக்க முடியாமல் குழந்தைகளின் விருப்ப உணவு வழங்க முடியாமல் மிகவும் கேள்விக்குறியாய் நாடகக் கலைஞர்களின் வாழ்நிலை சென்றுகொண்டிருக்கிறது.இதை கருத்தில் கொண்டு தயவு செய்து அதிக ஊதியம் பெறும் சங்க உறுப்பினர்கள் நமது நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக தாங்கள் வழங்கும் நிதி பல குடும்பங்களில் பசிப் பிணியை போக்கும். எனவே உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன். நமது சங்கத்திற்கு நிதி வழங்குங்கள். நம் மூத்த நாடக கலைஞர்களின் வாழ்வாதார கண்ணீர் துடைக்க.. நன்றியுடன் முத்து” என தெரிவிக்கப்பட்டுள்ளது.