பீஸ்ட், கே.ஜி.எஃப்-2 ஐ தொடர்ந்து முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் சுமார் ரூ.3000 கோடி வரையில் திரைத்துறை சார்ந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக முடங்கிய தமிழ் சினிமா, இந்த ஆண்டு மீண்டு வர தொடங்கியிருப்பதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். இந்த ஆண்டில் வலிமை, ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், கே.ஜி.எஃப்-2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி திரைத்துறை வர்த்தகத்தை மேல்நோக்கி கொண்டு செல்ல தொடங்கியிருக்கின்றன.
இந்த நான்கு படங்களும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டி கொடுத்திருக்கின்றன. இந்த நான்கு படங்கள் மூலம் மட்டும் ஷேர் தொகை 200 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பெரிய படங்கள் வெளியாகி வெற்றியடைந்து வரும் நிலையில், இந்தக் கோடை விடுமுறையிலும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அதில் குறிப்பாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. காதலும் காமெடியும் கலந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில் அசோக்செல்வன் நடித்துள்ள 'ஹாஸ்டல்' என்ற நகைச்சுவை திரைப்படமும் வெளியாகவுள்ளது. அந்த திரைப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' திரைப்படத்தை மே 13-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் 'லைக்கா' திட்டமிட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல, 20-ம் தேதி விஜய் சேதுபதியின் மாமனிதன், உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன. ஒரு வார இடைவெளியில் இரண்டு திரைப்படங்கள் வெளியாவதால் தங்களுடைய திரைப்படத்தை மே 5-ம் தேதி வெளியிடலாமா என்ற ஒரு யோசனையும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருப்பதாக கூறப்படுகிறது.
உதயநிதி நடித்திருக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம், ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிக்கல் 15' படத்தின் ரீமேக். இதனால் அந்த படத்திற்கு தமிழகத்தில் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துடன் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' கிராமத்துப் பின்னணி குடும்ப சென்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப ரசிகர்களின் ஆதரவு அந்த படத்திற்கு இருக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், மே 27-ம் தேதி விக்ரம் நடித்து இருக்கும் 'கோப்ரா' படத்தை வெளியிட தயாரிப்பாளர் லலித் முயற்சித்து வருகிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் அந்தப் படத்தை கோடையில் வெளியிட்டு வெற்றியடைய செய்ய வேண்டும் எனவும் திட்டமிடுகின்றனர்.
ஆனால், அதற்கு அடுத்த வாரமே கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் வெளியாவதால் தங்கள் வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றிக் கொள்ளலாமா என்ற ஒரு திட்டமும் தயாரிப்பாளரிடம் உள்ளது. அந்தப்படத்தில் கமலஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் விக்ரம் படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து இறுதியாக ஜூன் 17ஆம் தேதி அருண்விஜய் நடித்து இருக்கும் 'யானை' மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் 'வீட்ல விசேஷம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் யானை திரைப்படம் ஆக்ஷன் கமர்சியல் ஃபார்முலாவில் இயக்கியிருக்கிறார் ஹரி. வீட்ல விசேஷம் படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர். இதனால் அடுத்த இரண்டு மாதத்தில் சுமார் 15 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு கோடை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.