காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான ‘லக்ஷ்மி’ படத்தின் க்ளைமேக்ஸ் பாடலில் அக்ஷய் குமார் 100 திருநங்கைகளுடன் நடனம் ஆடி அசத்தியுள்ளார். நேற்று மாலை அக்ஷய் குமார் வெளியிட்ட பம் போலே பாடலில்தான், 100 திருநங்கைகள் நடனம் ஆடியிருக்கிறார்கள்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த காஞ்சனா படம் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்தது. சமூகத்தினரால் ஒதுக்கப்படும் திருநங்கைகள் படும் கஷ்டத்தையும் புறக்கணிப்புகளையும் சரத்குமார் திருநங்கையாக நடித்து மக்கள் மனங்களை மாற்றியிருப்பார். தமிழில் வெற்றிப் பெற்ற இப்படத்தை இந்தியில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார், கியாரா அதிவானி நடிக்க இயக்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. லக்ஷ்மி பாம் என்று தலைப்பு சமீபத்தில் சர்ச்சையானதால் ‘லக்ஷ்மி’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் நேற்று மாலை அக்ஷய் குமார் ‘bombholle’ க்ளைமேக்ஸ் பாடலையும் வெளியிட்டார். ஏற்கனவே, காஞ்சனா படத்தில், க்ளைமேக்ஸ் பாடலான ‘கொடியவனின் கதையை முடிக்க’ பாடல் வெறித்தனான ஹிட் அடித்தது. அதேபோல், பெரிய சிவன் சிலை முன்பு சிவப்பு நிற உடையில் ஆக்ரோஷமாக அக்ஷய்குமார் ஆடும் வீடியோவை இதுவரை 17 மில்லியன் மக்கள் யூட்யூபில் பார்த்து ரசித்துள்ளார்கள்.
பொதுவாக பாடல்களுக்கு நடனம் ஆடவேண்டும் என்பதால் நடனம் ஆடுபவர்களைத்தான் கெட்டப் சேஞ்ச் செய்து ஆட வைப்பார்கள், இயக்குநர்கள். ஆனால், இப்பாடலின் சிறப்பு என்னவென்றால், அக்ஷய் குமார் ஒரிஜினலாகவே 100 திருநங்கைகளுடன் நடனம் ஆடியுள்ளார் என்பதுதான். இதற்காக, அக்ஷய் குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.