வினோத்குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா நடித்திருக்கும் படம் 'லத்தி'. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினரான விஷால், சுனைனா, ரமணா, நந்தா, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக உதயநிதி, எஸ்.ஜே.சூர்யா, நாசர், மனோபாலா எனப் பலரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை உதயநிதியும், தெலுங்குட்ரெய்லரை எஸ்.ஜே.சூர்யாவும், கன்னட ட்ரெய்லரை நாசரும், இந்தி ட்ரெய்லரை மூத்த தயாரிப்பாளர்களும் வெளியிட்டனர்.
விழாவில் உதயநிதி பேசும்போது "விஷால் முன்னாலேயே போலீஸ் ரோல் செய்திருக்கிறார். கமிஷ்னர், இன்ஸ்பெக்டர் இப்போது ப்ரோமோஷன் கிடைத்து கான்ஸ்டபிள் ஆகியிருக்கிறார்போல. நான் போலீசாக நடித்த 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் பாட்டு, சண்டைக் காட்சிகள் இல்லாமல்தான் நடித்தேன். அது எல்லாம் இல்லாமல் தான் நான் பார்த்துக்கொள்வேன். ஆனால் விஷால் அப்படியே நேர் எதிர். இவ்வளவு சிரமப்பட்டு சண்டை செய்து நடித்திருக்கிறார். படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். அப்படியே அந்த நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடியுங்கள். அதைக் காரணம் காட்டி கல்யாணம் செய்யாமல் இருக்கிறார் விஷால்" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விஷால் "இந்தப் படத்தை ரமணா - நந்தா தயாரிக்கிறார்கள் என முடிவானதும் படத்தின் டீசர் வெளியீடு உதயா தான் செய்யவேண்டும் என முடிவாக சொன்னேன். அது இப்போது நடந்திருக்கிறது. சீக்கிரமே, நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அதில் உதயநிதி பெயரும், முதலமைச்சர் ஸ்டாலின் பெயரும் இடம்பெற வேண்டும் என்பது என் ஆசை. ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டடத்தில் இவர்கள் பெயர் இருக்க வேண்டும். அதுதான் எங்களது ஆசை" என்றார்.
எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், "இந்தப் படம் உறுதியாக ஹிட். ஏன் சொல்கிறேன் என்றால், விஷால் சார் மிக கடினமாக உழைத்து நடித்திருக்கிறார். என்னிடம் இந்தக் கதையைப் பற்றி மிக வியந்து ஒருவர் சொன்னார். அவ்வளவு கூட்டத்தை வைத்து இப்படி ஆக்ஷன் படத்தை எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்தேன். எனக்கு இன்டஸ்ட்ரியில் இன்னொரு சகோதரர் கிடைத்திருக்கிறார்" என்றார்.
இயக்குநர் வினோத் குமார் பேசியபோது "இந்தப் படம் உருவாக காரணமான அனைவருக்கும் நன்றி. நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனால், நன்றி தெரிவிப்பதற்கான இன்னொரு மேடை அமையும். அப்போது சொல்கிறேன். படம் உருவாக முதுகெலும்பாய் இருந்த விஷால் சாருக்கு நன்றி" என்றார்.