மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரை கௌரவப்படுத்தும் வகையில், மைசூர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க உள்ளது.
மறைந்த கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், முன்னணி நடிகருமான புனீத் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன புனீத் ராஜ்குமார் உயிரிழந்தது, ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், புனீத் ராஜ்குமாரை கௌரவப்படுத்தும் வகையில், மைசூர் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்ட அளிக்க உள்ளது. வருகிற மார்ச் 22-ம் தேதி 102-வது பட்டமளிப்பு விழா மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில், புனீத் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டத்தை புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனீத் ராஜ்குமார் பெற்றுக்கொள்கிறார்.
புனீத் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரும் 46 வருடங்களுக்கு முன்னதாக, அவரது 46 வயதில் தான் கௌரவ டாக்டர் பட்டம் இதே பல்கலைக்கழகத்தால் பெற்றார். தற்போது அதேபோல், புனீத் ராஜ்குமார் கௌரவ டாக்டர் பெற உள்ளார் என பேராசிரியர் குமார் தெரிவித்துள்ளார். திரையுலகில் ஆற்றிய பங்களிப்பிற்காகவும், தங்களது தொண்டு நிறுவனத்தின் மூலம், அதிகளவிலான தொண்டுகளை குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக உதவியததாற்காகவும் இந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ திரைப்படம் அவரது பிறந்தநாளான மார்ச் 17-ம் தேதி உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.