லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.முரளிதரன் இன்று காலமானார். அவருக்கு வயது 66.
தமிழ் திரையிலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக லட்சுமி மூவி மேக்கர்ஸ் விளங்கி வருகிறது. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளாக கே. முரளிதரன், வி. சுவாமிநாதன், ஜி. வேணுகோபால் ஆகியோர் இருக்கின்றனர். கடந்த 1994-ம் ஆண்டு ‘அரண்மனை காவலன்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே. முரளிதரன், தொடர்ந்து ‘கோகுலத்தில் சீதை’, ‘பிரியமுடன்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, ‘உள்ளம் கொள்ளைப் போகுதே’, ‘உன்னை நினைத்து’, ‘பகவதி’, ‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’, ‘சிலம்பாட்டம்’ உள்பட பல படங்களை தயாரித்ததுடன், விநியோகித்தும் வந்தார். கடைசியாக ‘ஜெயம் ரவியின் ‘சகலகலா வல்லவன்’ படம் வரை தயாரித்திருந்தார் கே.முரளிதரன்.
மகன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்
சொல்லப்போனால் 90 காலக்கட்டங்களில் பிரபலமான தயாரிப்பாளராக கே முரளிதரன் இருந்து வந்தார். தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், லட்சுமி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே. முரளிதரன் (66) கும்பகோணத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டதும் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தயாரிப்பாளர் முரளிதரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு திரைத்துறைக்கு பெரும் இழப்பு என்றே கூறலாம். கே. முரளிதரனின் காலமானதை அடுத்து திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.