இந்தியில் வெளியாகும் தென்னிந்தியப் படங்களைவிட முன்னணி நடிகரான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முதல்நாள் வசூல் மிகவும் குறைந்துள்ளது பாலிவுட் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1986-ம் ஆண்டு வின்ஸ்டன் குரூம் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு வெளியான நாவல்தான் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இந்த நாவலை தழுவி, அதேபெயரில் இயக்குநர் ராபர்ட் ஜெம்மிக்ஸ் ஹாலிவுட்டில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். டாம் ஹாங்க்ஸ், ராபின் ரைட், சாலி ஃபீல்டு ஆகியோரின் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மொத்தம் 6 ஆஸ்கர் விருதுகளையும், 2 கோல்டன் குளோப் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸில் சக்கைப் போடு போட்டது. 10 வருட போராட்டத்திற்குப் பிறகு, இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்யும் உரிமையை அமீர்கான் பெற்றிருந்தார்.
மேலும் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக சுமார் 10 வருடங்கள் ஸ்கிரிப்ட் எழுதும் பணியை பிரபல நடிகரான அதுல் குல்கர்னி மேற்கொண்டிருந்தார். இவ்வாறு பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2019-ம் ஆண்டு முதல் படப்பிடிப்பு நடந்துவந்தநிலையில், கொரோனா காரணமாக பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக நேற்று வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான அமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா ஆகியோரின் நடிப்பு பாராட்டைப் பெற்றாலும், மெதுவாக நகரும் திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை மிகவும் கவலை அடைய செய்துள்ளது. இந்திப் படங்களான ‘பூல் பூலியா 2’ முதல்நாளில் 14.11 கோடி ரூபாயும், அக்ஷய்குமாரின் ‘பச்சான் பாண்டே’ 13.25 கோடி ரூபாயும் வசூலித்த நிலையில், முன்னணி நடிகரான அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படம் 11.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
கடந்த 13 வருடங்களில் அமீர்கானின் நடிப்பில் வெளியானப் படங்களில் மிகவும் மோசமான வசூலை பெற்றப் படம் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிலும் தென்னிந்தியப் படங்கள் இந்தியில் வெளியாகி வசூலித்த வசூலில் பாதிகூட இந்தப் படம் எட்டவில்லை என்று வேதனை தெரிவிக்கப்படுகிறது. இந்தியில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் முதல்நாளில் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல், ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம் இந்தியில் மட்டும் 53.95 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது.
ஆனால் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ முதல்நாளிலேயே பெருமளவு வசூலிக்கவில்லை என்றநிலையில், வரும் நாட்களில் வசூல் எவ்வாறு இருக்கும் என்று கவலை அடைய செய்துள்ளது. இதேபோல், நேற்று அமீர்கான் படத்துடன் வெளியான அக்ஷய் குமாரின் ‘ரக்ஷா பந்தன்’ படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. முதல் நாளில் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. எனினும், டெல்லி மற்றும் கிழக்கு பஞ்சாப்பில் ‘லால் சிங் சத்தா’ படமும், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ரக்ஷாபந்தன் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் வரும் நாட்களில் வசூல் குறிப்பிட்ட அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.