தனியார் தொலைக்காட்சி சின்னத்திரை நடிகர் பாலாவை அனைவருக்கும் தெரியும். இவர் வேலை நிமித்தமாக சென்னையைதேடி வந்தவர். சென்னையில் இறங்கியதும் அனகாபுதூர் இவரை அணைத்துக்கொண்டு அவருக்கு ஒரு வாழ்க்கையையும் தந்திருக்கிறது. தனியார் டிவி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலக்கியவர் பாலா.
அதைத்தொடர்ந்து ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன் பிறகு தனியார் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவரின் காமெடியான பேச்சு சினிமா தளத்திற்கு வித்திட்டது. ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலிக்குத்தி பாண்டி, லாபம், ஆண்ட்டி இந்தியன், நாய் சேகர், தேஜாவூ, கனம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என நடிப்பதற்கு பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. இதன் மூலம் அவர் சம்பாதித்த பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய நினைத்தார்.
அதன் முதல்படியாக, ஈரோடு மாவட்டம் கடம்பூர் குன்றி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தனது சொந்த செலவில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார். அதன்பிறகு குறுகிய இடைவெளியில் மேலும் 3 இடங்களில் ஆம்புலன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.
தற்பொழுது மிக்ஜாம் புயலால் நிலைகுலைந்த சென்னையில் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கு தனது சொந்த பணத்தில் பாலா ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் என்ற வீதத்தில் 200 குடும்பங்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். நேற்று அவர் இந்த உதவியை செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியிருந்த வீடியோவில், “சென்னை மழையில் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என நினைத்தேன். என்னிடம் இருந்த தொகை ரூபாய் இரண்டு லட்சத்தை ஆளுக்கு ஆயிரம் ரூபாய் என 200 குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளேன்.
நேற்றே வந்திருப்பேன். ATM ஏதும் திறக்கப்படாமல் இருந்ததால் பணத்தை எடுப்பதில் தாமதமானது.
என்னை வாழவைத்தது இந்த சென்னைதான். நான் வந்து தஞ்சமடைந்தது இதே அனகாபுதூர்தான். அதனால்தான் இங்கிருக்கும் மக்களுக்கு உதவி செய்ய நினைத்தேன். இரண்டு லட்சமும் நான் சம்பாதித்த பணம்தான். யாரிடமிருந்தும் உதவி பெறவில்லை.
சென்னை என்னை பார்த்துக்கொண்டது. அதனால என்னால முடிந்ததை செய்து இந்த ஊரை பார்த்துக்க வேண்டும். என் சேமிப்பில் 2.15 லட்சம் இருந்தது. அதில் 15,000 தொகையை எனக்கு வீட்டு வாடகை கொடுக்க வைத்துக்கொண்டேன். மற்ற தொகையை அப்படியே இங்கே கொடுத்துவிட்டேன்”என்றார். பாலாவின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இவருடன் சின்னத்திரை நடிகர் அமுதவானனும் உடனிருந்தார். அவருக்கும் பாராட்டு குவிந்துவருகிறது.