ஹீரோவாக தங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு வளர்ந்த ஹீரோக்கள் உதவ முன்வர வேண்டுமென்று தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘புறநகர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “அஜித்தை சோழா பொன்னுரங்கம் என்ற தயாரிப்பாளர் முதல்முறையாக அறிமுகம் செய்து ஹீரோவாக்கினார். அதற்கு முன்பு அஜித் மிகவும் கஷ்டப்பட்டார். பல தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டார். பின்னர், படிப்படியாக முன்னேறினார்.
அவர் மட்டுமல்ல பாக்கியராஜ், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் அனைவரும் படிப்படியாக கஷ்டப்பட்டே முன்னுக்கு வந்தனர். அஜித்தை அறிமுகம் செய்த சோழா பொன்னுரங்கம், இப்போது கஷ்டத்தில் இருக்கிறார். ஆனால், இவரோ போனி கபூருக்கு இரண்டு படங்களை நடித்து கொடுக்கிறார். பாவம் போனி கபூருக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை போல” என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த ராஜன், “தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனும் அஜித்தை வைத்து படம் எடுத்தார். அவரும் இப்போது கஷ்டத்தில் இருக்கிறார். நான் பெரிய ஹீரோக்களை கேட்டுக்கொள்வதெல்லாம், உங்கள் ஆரம்ப கால முன்னேற்றத்தில் பங்கெடுத்த தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உதவுங்கள்.
அப்படிதான், ரஜினிகாந்த் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் "பாண்டியன்" படத்தில் நடித்தார். அந்தப் படம் ரஜினியின் ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவிய தயாரிப்பாளர்களுக்காக எடுக்கப்பட்டது. பின்பு, அந்த படத்தில் வந்த லாபத்தை வைத்து தயாரிப்பாளர்கள் சொந்தமாக ஆளுக்கொரு வீடு வாங்கினார்கள். இது எவ்வளவு பெரிய புண்ணியம். இதனை ஹீரோக்கள் செய்ய வேண்டும்" என்றார்.