சினிமாவில் ‘ரீல்’ ஹீரோக்களாக வலம் வரும் நடிகர்கள் கொரோனா பேரிடர் காலத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதி திட்டத்திற்கு நிதியுதவி அளித்து தற்போது ‘ரியல்’ ஹீரோக்களாகிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களோடு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என சினிமா துறையினர் எவ்வளவு கொரோனா நிவாரண நிதியுதவி அளித்துள்ளார்கள் என்ற தொகுப்பு இதோ…
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். அதனால், பொதுமக்களும் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு” வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரின் இந்த வேண்டுகோளுக்கு சினிமாத்துறையில் இருந்து முதன்முதலில் நிவாரண நிதி அளித்து முன்மாதிரியாய் செயல்பட்டவர் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்தான். 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார். அவரைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தியுடன் சென்று 1 கோடி ரூபாய் நிதியை முதல்வர் மு.க ஸ்டாலினை நேரிலேயே சந்தித்து அளித்தார்.
அதேபோல, இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று மு.க ஸ்டாலினை சந்தித்து 1 கோடி ரூபாய் அளித்தார். இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் 25 லட்சமும், இயக்குநர் ஷங்கர் 10 லட்சமும் கொரோனா நிவாரண நிதியை வழங்கி உதவியுள்ளனர்.
பாடலாசிரியர் வைரமுத்து முதல்வரை சந்தித்து 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் அஜித் 25 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும், 10 லட்சம் பெப்சி தொழிலாளர்கள் சங்கத்திற்கும் பகிர்ந்தளித்து நிதி அளித்துள்ளார். நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் முதல்வரை சந்தித்து 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் 1 லட்சம் ரூபாய்யும், இயக்குநர் சி.எஸ் அமுதன் 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அளித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் 30 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியை அளித்திருக்கிறது. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் 10 லட்சம் ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாயும், நடிகர் ஜெயம் ரவி 10 லட்சம் ரூபாய்யும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.