2022-ம் ஆண்டு துவங்கி அரை வருடம் கடந்துள்ள நிலையில், கோலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் படங்களின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் கூட வெளிவராத நிலையில், 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதியுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கோலிவுட் இண்டஸ்ட்ரிக்கு புது நம்பிக்கையை கொடுத்தது என்றே கூறலாம். சுமார் 230 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படம், மீண்டும் கோலிவுட்டை பரபரப்பாக இயங்க தன்னம்பிக்கை கொடுத்தது.
இதன்பிறகு ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த ‘அண்ணாத்த’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 240 கோடி ரூபாய் வசூலித்தது. பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘மாநாடு’ திரைப்படம் 120 கோடி ரூபாய் வசூலித்து, சிம்புவிற்கு கம்பேக் கொடுத்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ படமும் 100 கோடி ரூபாய் வசூலித்து கோலிவுட்டை மிரள வைத்தது.
துவண்டு கிடந்த கோலிவுட், இந்தப் படங்களின் வெற்றிகளால் மீண்டெழுந்தது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு துவங்கி அரை வருடம் கடந்துள்ள நிலையில், கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. இதனால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் கோலிவுட் அதிக லாபம் ஈட்டியள்ளது என்றே கூறலாம். அந்தவகையில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியப் படங்கள் குறித்து சிறு தொகுப்பாக பார்க்கலாம்.
1. விக்ரம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 3-ம் தேதி வெளியான ‘விக்ரம்’ படத்தின் வெற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தாறுமாறான பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்றே கூறலாம். படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும், இன்றும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறத. திரையரங்குகளில் வெளியாகி கடந்த ஒரு மாதத்தில் இந்தப் படம், 420 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது. தென்னிந்திய அளவில் அதிக வசூல் செய்தப் படங்களில் ‘விக்ரம்’ படம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2. பீஸ்ட்
கடந்த வருடம் வெளியான ‘டாக்டர்’ படத்தின் வெற்றியால் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘பீஸ்ட்’ படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில், கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியான ‘பீஸ்ட்’ படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. எனினும், வழக்கம்போல் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக வலம் வரும் நடிகர் விஜயின் படங்களில் ஒன்றாக ‘பீஸ்ட்’ படமும் இணைந்தது. அதன்படி, சுமார் 250 கோடி ரூபாய் இந்தப் படம் வசூலித்தது. அதேநேரத்தில் அட்லீயின் இயக்கத்தில் உருவான ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களை விட வசூல் குறைந்து காணப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது என்றும் சொல்லலாம்.
3. வலிமை
ஹெச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி, ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் 2-வது முறையாக இணைந்தப் படம் ‘வலிமை’. கொரோனா காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டநிலையில், இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ‘வலிமை’ இருந்தது. திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும், ‘பீஸ்ட்’ படம் போன்றே இந்தப் படமும் 200+ கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. விமர்சனங்களை எல்லாம் பெரிதுப்படுத்தாமல், இந்தக் கூட்டணி 3-வது முறையாக இணைந்து ‘ஏ.கே. 61’ படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படுமா அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுமா என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
4. எதற்கும் துணிந்தவன்
கொரோனா காரணமாக சூர்யாவின் நடிப்பில் உருவான ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ ஆகியப் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிய நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்கள் பெறவில்லை என்றாலும் இந்தப் படம் 160 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. நடிகர் சூர்யா இந்தப் படத்தில் சோலாவாக பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும், அடுத்ததாக வெளிவந்த ‘விக்ரம்’ படத்தில் இறுதிக் காட்சியில் சில நிமிடங்களே நடித்து இருந்தாலும், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்தார். இதனால் ‘விக்ரம்’ பட வெற்றிக்கு காரணமானவர்களில் சூர்யாவும் குறிப்பிடத்தக்கவர் என்பது மறுக்க முடியாது. அதனால்தான் கமல்ஹாசன் தனது ஆடம்பர வாட்ச்சான ரோலக்ஸ் வாட்ச்சை அன்புப் பரிசாக கொடுத்திருந்தார்.
5. டான்
இந்த அரையாண்டு கோலிவுட்டில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியப் படங்களில் கடைசியாக ‘டான்’ படத்தையும் சேர்க்கலாம். ‘டாக்டர்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு 115 கோடி ரூபாய் வசூலை ஈட்டி தந்துள்ளது ‘டான்’. காலேஜ் கதைக்களம், நகைச்சுவை, 2கே கிட்சுக்கு பிடித்தமான பிடிஎஸ் ஸ்டைல், எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனம், தனியார் டிவி பிரபலங்கள் என படத்தில் அறிமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி திரைக்கதையை கையாண்ட விதம், இந்த வெற்றிக்கு வழி வகுத்தது என்றே கூறலாம்.
இதுமட்டுமின்றி விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ஓடிடியில் வெளியான விக்ரமின் ‘மகான்’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதேபோல் ‘நாய் சேகர்’, ‘முதல் நீ முடிவும் நீ’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘கடைசி விவசாயி’, ‘மன்மத லீலை’, ‘டாணாக்காரன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விசேஷம்’, ‘மாமனிதன்’, ‘மாயோன்’, ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’, ‘யானை’ ஆகியப் படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அடுத்த அரை வருடத்தில் தொடர்ச்சியாக தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, விக்ரமின் ‘கோப்ரா’, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, கார்த்தியின் ‘சர்தார்’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு காத்துள்ளன. சொல்லப்போனால் தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் எல்லாம் இந்த வருடம் வெளியாகும் நிலையில், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் மட்டுமே மிஸ்ஸாகி இருப்பது ரசிகர்களை மட்டுமல்ல, நமக்கும் சற்று ஏமாற்றமாகவே உள்ளது.