பிரபல பாடகர் கே.கே.வின் திடீர் மறைவு ரசிகர்களை ஒருபக்கம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளநிலையில், அவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என கொல்கத்தா காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது தலை மற்றும் முகத்தில் காயம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பின்னணிப் பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற கே.கே. (53), நேற்றிரவு கொல்கத்தா நஸ்ரூல் மஞ்சாவில் உள்ள கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில், ரசிகர்களின் மொபைல் ஒளிவெள்ளத்தில் மிக உற்சாகமாக பாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு ஒருவிதமான அசௌகரிய உணர்வுடன், ஒளி கூச்சத்தால் கண்கள் இருட்ட துவங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக பாடுவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்தவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு, மேடையின் பின்பக்கம் வழியாக தனது ஓட்டல் அறைக்கு, தனது காவலர்களின் உதவியுடன் திரும்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் ஓட்டல் அறைக்கு திரும்பியதும் இதயம் கனமாக இருப்பதாக கூறிய சில நொடிகளிலேயே, கேகே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக அவர், கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனைக்கு இரவு 10 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கே.கே. இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கே.கே.வின் உடல், எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கே.கே.வின் தலை மற்றும் முகத்தில் சிறுகாயங்கள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கே.கே. மயங்கி விழுந்தபோது ஏற்பட்ட காயமா என தெரியாதநிலையில், உடற்கூராய்வுக்குப் பின்னரே முழு தகவல்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என நியூ மார்க்கெட் காவல்நிலையம் வழக்குப் பதிந்துள்ளது.
இதற்கிடையில் இசை நிகழ்ச்சியில் 2,500 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருந்த அறையில், 5,000 பேர் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நிகழ்ச்சி நடந்த மேடையில் ஏசி குறைவான அளவே இருந்ததால் மிகவும் வெப்பமாக இருந்ததாகவும், இறுக்கமான சூழ்நிலை நிலவியதாகவும் கே.கே., நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும், கே.கே. தங்கியிருந்த கிராண்ட் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில், கே.கே.வின் குடும்பத்தினர் கொல்கத்தா சென்றடைந்துள்ளனர். கே.கே.வின் உடற்கூராய்வு பரிசோதனை முடிந்ததும், அவரது உடல் மும்பைக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. மறைந்த பாடகர் கே.கே.விற்கு ஜோதி என்ற மனைவியும், நகுல் கிருஷ்ணா குன்னத் என்ற மகனும், தமாரா குன்னத் என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.