செய்தியாளர் - புனிதா பாலாஜி
தேசங்கள் பல கடந்து, விரிந்திருக்கும் அதன் எல்லைகள் கடந்து, இதயங்களை இணைக்கும் மொழிகள் கடந்து இசை எனும் ஒற்றைப் புள்ளியில் உலக மக்களை இணைத்தவர், MJ எனும் மைக்கேல் ஜாக்சன். கருப்பு நிற கோட் சூட் அணிந்த இவரின் உருவம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் ஆழப் பதிந்த அன்பின் சின்னமாகிவிட்டது.
KING OF POP என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜாக்சனின் சாதனைகளையும், அவர் விட்டுச் சென்ற இடத்தையும் இன்று வரை எவராலும் நிரப்ப முடியவில்லை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் 1958ஆம் ஆண்டு பிறந்த மைக்கேல் ஜாக்சன், பால்ய பருவத்திலேயே POP இசையை கற்றுத் தேர்ந்தார். பதின் வயதிலேயே பாடல்கள் பாடத் தொடங்கிய ஜாக்சன், தன் தனித்துவ படைப்புகளால் இசைத்துறையில் பிரபலமானார்.
1982ஆம் ஆண்டு வெளியான அவரின் த்ரில்லர் ஆல்பம், உலக அளவில் பெரும் சாதனையை படைத்தது. உலக அளவில் 75 கோடிக்கும் மேற்பட்ட பதிப்புகள் விற்பனையாகி, இசை உலகை திக்குமுக்காட வைத்தது, ஜாக்சனின் த்ரில்லர்... ஜாக்சனின் பாடல்கள், பலதரப்பட்ட மக்களின் மனதை கொள்ளை கொண்ட படைப்புகளாகி இருக்கின்றன. ROBO DANCE, MOON WALK என நடனத்தில் கால்கள் கொடுத்த வித்யாச அசைவுகளே, இவரை வியந்து பார்க்க காரணமாயின. லாப நோக்கம் மட்டுமின்றி சமூக நோக்கம் கொண்ட பல பாடல்களும் இவரின் அடையாளம் எனலாம்.
அதில் முக்கியமான ஆல்பம் HEAL THE WORLD.. காதல் பாடல்களை பாடி உள்ளங்களை உருக வைத்த ஜாக்சன், இதில் உலக அமைதி மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவதை வலியுறுத்தி, இயற்கையின் மீதான காதலை வெளிப்படுத்தி இருப்பார். AFRO அமெரிக்கரான ஜாக்சன் நிறவெறிக்கு எதிராக வெகுண்டெழுந்த பாடல்தான் BLACK OR WHITE.. அமெரிக்காவில் நிலவிய நிறவெறிக்கும், இன வெறிக்கும் எதிராக ஜாக்சன் எழுதிய இப்பாடல், அவரின் இசை வழியே அதிர்வலைகளை உருவாக்கியது.
இதே ஸ்டைலில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுதலைக்கான முழக்கத்தையும் பதிவு செய்திருக்கிறார், மைக்கேல் ஜாக்சன் 1996ஆம் ஆண்டு வெளியான இப்பாடலில், சொற்களின் துணை கொண்டு ஆதிக்க மனோபாவத்துக்கு எதிராக கற்களை வீசினார். எதிர்முழக்கத்தோட சமத்துவத்தின் தேவையை உணர்ந்து அவர் பாடிய BEAT IT மற்றொரு முக்கியமான பாடல்.
BAD, DANGEROUS, REMEMBER THE TIME, EART உள்ளிட்ட பல ஆல்பங்கள், அவரின் முக்கிய பாடல்களாக கொண்டாடப்பட்டுள்ளன. இசைத்துறையில் பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் ஜாக்சன், 13 கிராமி விருதுகளுக்குச் சொந்தக்காரர். எவராலும் எட்ட முடியாத பல சாதனைகளை நிகழ்த்திய இவர், 2009ஆம் ஆண்டு இதே நாளில் உலகை விட்டு பிரிந்தார். அவர் உடலால் நம்மை விட்டு பிரிந்தாலும், பிரபஞ்ச பெருவெளியில் காற்று உள்ளவரை அவரின் குரல் என்றென்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.