நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம், 21 நாட்களிலேயே வசூலில் இந்தியில் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தை ஓரங்கட்டி சாதனை படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு இந்திய முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையடுத்து கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியானது.
ரசிகர்கள் எதிர்பார்த்ததுப் போன்றே, படத்தின் விஷுவல், சண்டைக் காட்சிகள், வசனங்கள், இசை என அனைத்தும் ‘கே.ஜி.எஃப். 2’ படத்தில் மிரட்டலாக இருந்தது. இதனால், இந்தியா முழுவதும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது இந்தப் படம். முதன்முதலாக தென்னிந்தியாவை சேர்ந்த கன்னட மொழிப் படம் ஒன்று, பல்வேறு மொழிகளை பேசும் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.
குறிப்பாக பாலிவுட்டில் ராஜமௌலியின் ‘பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின்னர் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்திற்குப் பிறகு, வட இந்தியாவில் அதிகளவு ரசிகர்களை ‘கே.ஜி.எஃப். 2’ ஈர்த்துள்ளது. இதனால் தற்போது தென்னிந்திய படங்களுக்கு மவுசு கூடி வருகிறது.
இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். 2’ திரைப்படம், 21 நாட்களிலேயே வசூலில் இந்தியில் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தை ஓரங்கட்டி சாதனை படைத்துள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படம் இந்தியில் மட்டும் 510.99 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்ததாக அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் 387.38 கோடி ரூபாயை இருந்து வந்தது. ஆனால், படம் வெளியான 21 நாட்களிலேயே இந்த சாதனையை தகர்த்தெறிந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படம் 391.65 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
‘பாகுபலி 2’ திரைப்படம் மொத்த வசூல் ரூ. 1810 கோடி, ‘தங்கல்’ திரைப்படம் மொத்த வசூல் ரூ. 2,024 கோடி, ‘கே.ஜி.எஃப். 2’ படம் இதுநாள் வரையில் மொத்த வசூல் ரூ. 1,056 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.