மீண்டும் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு- கைதுக்கு இடைக்காலத் தடை

மீண்டும் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு- கைதுக்கு இடைக்காலத் தடை
மீண்டும் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு- கைதுக்கு இடைக்காலத் தடை
Published on

மலையாள திரையுலகின் முன்னணி நடிகை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனுவை 5-வது முறையாக ஒத்திவைத்துள்ளது. மேலும், வரும்  பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு இடைக்கால உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பலகட்ட சட்டப்போராட்டங்களுக்குப் பின்னர், நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி ஒருவரை கொலை செய்ய நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாக அவரது நண்பரும், இயக்குநருமான பாலசந்திர குமார் சமீபத்தில் நீதிமன்றத்தில் வாக்குமூலமாகப் பதிவு செய்தார். 

இதையடுத்து நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், முன்ஜாமீன் கோரி, நடிகர் திலீப் உள்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கெனவே நான்கு முறை ஒத்திவைத்த கேரள உயர் நீதிமன்றம், இன்று நடைபெற்ற விசாரணையில் 5-வது முறையாக ஒத்திவைத்துள்ளது.

இன்று நடைபெற்ற விசாணையின்போது, திலீப்பை கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை புதன்கிழமை வரை நீட்டிக்க திலீப் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவிக்காததால், இந்த உத்தரவை வரும் புதன்கிழமை வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வரும் புதன்கிழமை பிப்ரவரி 2-ம் தேதி வரை, முன் ஜாமீன் மீதான விசாரணையை தள்ளி வைத்து, கைது நடவடிக்கைக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, முன்ஜாமீன் மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், அப்போது திலீப் உட்பட 6 பேரும் ஜனவரி 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் 27-ம் தேதி வரை திலீப்பைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மூன்று நாட்களும் தலா 11 மணிநேரம் விசாரிக்கப்பட்டனர். இதில் , நடிகர் திலீப்பிடம் மட்டும் தனியாக 33 மணிநேரம் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com