‘காந்தாரா’வின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடைநீக்கம்?-கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

‘காந்தாரா’வின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடைநீக்கம்?-கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
‘காந்தாரா’வின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடைநீக்கம்?-கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Published on

காப்புரிமை சர்ச்சையில் சிக்கிய ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடையை நீக்கி கோழிக்கோடு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற ‘காந்தாரா’ படத்தை, ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தநிலையில், கேரளாவைச் சேர்ந்த கோவிந்த் வசந்தாவின் இசைக்குழுவான ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசைத்து யூட்யூப்பில் வெளியிட்டு இருந்த ‘நவரசம்’ பாடலும், ‘வராஹ ரூபம்’ பாடலும் ஒன்றாக இருப்பதாக காப்புரிமை சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ‘வராஹ ரூபம்’ பாடலை ஒலிபரப்ப தடைவிதித்து கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘காந்தாரா’ படத்தில் ‘வராஹ ரூபம்’ பாடலின் ஒரிஜினல் ட்ராக் மாற்றியமைக்கப்பட்டு வெளியிட்டு இருந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அந்தப் பாடலுடன் ‘காந்தாரா’ படத்தை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து ட்ரெண்டாக்கி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ‘காந்தாரா’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர், கோழிக்கோடு விதித்த தடைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் எந்த காப்புரிமை சட்டத்தையும் மீறவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம், “மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து, மனுதாரர் ஏன் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினார் என தெரியவில்லை. மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை தான் விதித்துள்ளது. அவர்களின் உத்தரவு இறுதியானது அல்ல. அங்கேயே மேல்முறையீடு செய்யப்படவில்லை. இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, எதிர் அறிக்கை/பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து, அதன் முன் அனைத்து வாதங்களையும் எழுப்புவது மனுதாரரின் பொறுப்பாகும்’ என்று கூறியது.

இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று மீண்டும் இருதரப்பு வாதத்தையும், கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகார வரம்புக்குட்பட்டதாக (jurisdiction) இல்லை என்று ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தடையை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியரும், எழுத்தாளருமான ஷசிராஜ் கவுர் உறுதி செய்துள்ளதாக போஸ்டர் ஒன்றும் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பழைய ‘வராஹ ரூபம்’ பாடலுடன் மீண்டும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘காந்தாரா’ படம் வெளியிடப்படுமா என்று ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com