இந்தி திணிப்பை மையக்கருவாக கொண்டு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “ரகு தாத்தா”. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்திலும், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இன்று காலை இத்திரைப்படத்தின் டீசரை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், “கயல்விழியின் அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். #ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில்...” என குறிப்பிட்டு ஒரு நகைச்சுவை படமாகவே இருக்கும் என அழுத்தி கூறியுள்ளார். ஆனால் படத்தில் முழுக்க முழுக்க இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பும், அதை எதிர்க்கும் வசனங்களும் நிரம்பி வழிகின்றது.
ரகு தாத்தா திரைப்படத்தின் பயணம், கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தின் இந்தி தெரியாத பள்ளி வயதில் “தமிழ்ல சொல்லுங்க சார்” என்பதில் தொடங்கி ”இந்தியை திணிக்காதே, இந்தி தெரியாது போயா” என்பது வரை பயணிக்கிறது.
நகைச்சுவை காட்சிகள் அங்கங்கே இடம்பெற்றாலும், “பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் இந்தியில் சொல்லப்படும் கமாண்ட்டை எதிர்த்து, ‘தமிழ்ல சொல்லுங்க சார்’ என கீர்த்தி சுரேஷ் கேட்பதும், ”தினம் ஒரு ஹிந்தி வார்த்தை (HINDI WORD OF THE DAY) என்ற தேர்வுக்கான வாக்கியத்தை அழிப்பதும், கிராமத்துக்கு மின்சாரமே வரல ஷபா ரொம்ப முக்கியமா ஷபா"
வள்ளுவன் பேட்டை தமிழ்மொழி என் கோட்டை, இந்தி பரீட்சைக்கு தமிழ்ல பிள்ளையார் சுழியா, இந்தில எக்சாம் எழுதினா தான் எங்களுக்கு புரோமோசன்னா அந்த புரோமோசனே வேணாம், திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே என்ற முழக்கமும், முடிவில் ”இதையெல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால் இந்தி தெரியாது போயா” என்ற வசனங்கள் மற்றும் காட்சிகளால் இந்தி திணிப்பை வலுவாக பேசுகிறது டீசர்.
சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம் இந்து மதத்தினரை புண்படுத்தியதாக ஓடிடியில் இருந்து டெலிட் செய்யப்பட்ட நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.