மறுதேர்தலை நடத்துவதற்கு நடிகர் சங்கம் வசம் பணம் இல்லை என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் சங்க பிரச்னைகள் குறித்து பல்வேறு கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது, “நடிகர் சங்கப் பிரச்னையில் ஐசரி கணேசன் எங்கள் தரப்பை விமர்சனம் செய்து வருகிறார்.
ஆனால் அவருக்குத்தான் நீதிமன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சங்கத்து உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது யார் என்று அனைவருக்கும் தெரியும். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை” என்றார்.
மேலும் அவர், “எங்களின் சட்டரீதியான போராட்டம் தொடரும். விரைவில் நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். நடிகர் சங்க சொத்து என்பது தனி நபரின் சொத்தல்ல; அதற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல; பதவிக்காக எத்தனை லட்சங்களை வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
தற்போது சங்கமே முடங்கிப்போய் உள்ளது. சங்கத்தில் பணமும் இல்லை. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் தேர்தலை நடத்துவதற்கு சங்கத்தில் பணம் இல்லை” என கூறினார்.