அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ள படம், ’ஹமாரே பாரா’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே, அதுதொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. முஸ்லிம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து 1 முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் முடிவில் படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், படத்தில் இடம்பெற்றிருந்த 2 சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கியதும் திரைப்படத்தை வெளியிடலாம் என அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், ’ஹமாரே பாரா’ திரைப்படம் இன்று வெளியாகவிருந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பல சிறுபான்மை அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, கர்நாடக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964-ன் கீழ் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, ’ஹமாரே பாரா’ என்ற பாலிவுட் திரைப்படத்தை, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு வெளியிட தடை விதித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் மனோஜ் ஜோஷி, "இந்த திரைப்படம் எந்த மதத்தையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. எந்த ஒரு சமூகத்திலும் பெண்களை அவமரியாதை செய்யக்கூடாது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கருத்து" என்று வலியுறுத்தி உள்ளார்.