மழையோடு பேரழகாய்... ரசிக்க வைக்கும் கர்ணனின் ‘திரெளபதையின் முத்தம்’ பாடல்!

மழையோடு பேரழகாய்... ரசிக்க வைக்கும் கர்ணனின் ‘திரெளபதையின் முத்தம்’ பாடல்!
மழையோடு பேரழகாய்... ரசிக்க வைக்கும் கர்ணனின் ‘திரெளபதையின் முத்தம்’ பாடல்!
Published on

கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல்திரெளபதையின் முத்தம்தற்போது வெளியாகி இருக்கிறது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியாகி வைரல் ஹிட் அடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வந்தது.

அதனைத்தொடர்ந்து, வெளியான இரண்டாவது பாடலான ‘பண்டாரத்தி புராணம்’. தமிழ் சினிமாவில் இழவு வீட்டு பாடல்கள் எத்தனையோ இடம்பெற்றிருக்கின்றன. தர்மதுரை படத்தில் மக்க களங்குதைய்யா, மதயானை கூட்டம் படத்தில் உன்னை வணங்காத நாளில்லை என எல்லா பாடல்களுமே வீட்டில் மூத்தவர் யாரேனும் ஒருவர் இறந்திருப்பார் அவரைப்பற்றி இடம்பெற்ற பாடலாகவே அமைந்தது. ஆனால், பாண்டார்த்தி பாடல் என்பது இறந்த மனைவி மீதான தன் காதலை, பிரிவின் சோகத்தை கணவனே பாடுவது புதிதான ஒன்றுதான். இதனால் பாரட்டுக்களை  குவித்தது.

தற்போது மூன்றாம் பாடலான ‘திரெளபதையின் முத்தம்’ வெளியாகி இருக்கிறது. இரண்டு பாடல்களும் வைரல் ஹிட் அடித்ததால் மூன்றாவது பாடலான ‘திரெளபதையின் முத்தம்’ பாடலுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தார்கள் ரசிகர்கள். எதிர்பார்ப்பை விணாக்காமல் காதுகளோடு கண்களையும் ரசிக்க வைக்கிறது திரெளபதையின் முத்தம் “தட்டான் தட்டான் வண்டிக்கட்டி பறந்தேன் கோழி தூவாட்டம்” பாடல். யுகபாரதியின் வரியில் தனுஷ், மீனாட்சி இளையராஜா பாடியிருக்கிறார்கள்.

பாடலில் தனுஷ் குரல் ஈர்ப்பது ஒருபுறம் என்றால் கண்களாலேயே உருகும் காதலை வெளிப்படும் ஹீரோயின் ரஜிஷா விஜயன் பாடலை திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறார். மழை அழகு. அதனோடு, கிராமத்துச் சூழல், தனுஷ் குரல், மேக்கப் இல்லாத ரஜிஷா விஜயன்,  சந்தோஷ் நாராயணன் இசை அத்தனையும் ஒன்று சேர்ந்து பேரழகாய் இருக்கிறது பாடல். ‘மழையில் நனைந்த மாதிரியே இருக்கிறது’ என்று பாராட்டித் தள்ளுகிறார்கள் ரசிகர்கள்.

இந்தப் பாடலில் உழவின் பெருமையை பேசும் உழுகுடிகள் நிலத்தை இழந்து கூலிகளாக மாற்றப்பட்டதை உணர்த்தும் வகையிலும் வரிகள் இடம்பெற்றிருக்கிறது. அந்தப் பாடல் வரிகள் வரும் போது பின்புலத்தில் விவசாயம் சார்ந்த காட்சிகள் கொள்ளை கொள்ளும் அழகுடன் இடம்பெற்றிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com