‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி ஏற்கனவே எழுதி வருவதாகவும், ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும், கதை பற்றிய பல சுவாரஸ்ய விஷயங்களை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரஹந்தூர் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் மற்ற திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு எப்படியோ, கன்னட திரையுலகிற்கு பொற்காலம் என்றே கூறவேண்டும். ஏனெனில், கடந்த 2022-ல் சாண்டல்வுட்டிலிருந்து வெளியான ‘கே.ஜி.எஃப். 2’, ‘காந்தாரா’, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ உள்ளிட்டப் படங்கள் எல்லாம், கன்னடத்தையும் தாண்டி சக்கைப் போடு போட்டன. இதில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த ‘கே.ஜி.எஃப். 2’ படம் ரூ. 1250 கோடியும், ‘காந்தாரா’ படம் ரூ. 400 கோடிக்கு மேலும் வசூலித்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப். 3’ மற்றும் ‘காந்தாரா 2’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில், ‘Deadline’ இணையதளப் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரஹந்தூர், ‘காந்தாரா 2’ படத்தை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குநர் ரிஷப் ஷெட்டி தற்போது ‘காந்தாரா 2’ படத்திற்கான கதை எழுது வருகிறார், மேலும் இதற்காக இரண்டு மாதங்களாக தனது உதவியாளர்களுடன் கடலோர கர்நாடகா காடுகளுக்குச் சென்று படத்திற்கான ஆராய்ச்சி நடத்தினார்.
மழைக்காலத்தில் எடுக்கவேண்டிய தேவை உள்ளதால், முதல்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றுக் கூறியுள்ளார். மேலும், ‘காந்தாரா 2’ சீக்குவலாக (sequel) இல்லாமல் ப்ரீக்குவலாக ( prequel) இருக்கும் என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.
அதாவது, கிராம மக்கள், பஞ்சுருளி தெய்வம் மற்றும் அரசன் ஆகியோருக்கு இடையேயான உறவை ஆராயும் ஒரு முன்னுரை கதை என்றும், தயாரிப்பாளர் விஜய் கிரஹந்தூர் தெரிவித்துள்ளார். கிராம மக்களையும், தன்னைச் சுற்றியுள்ள நிலத்தையும் காக்க, அரசன் தெய்வத்துடன் ஒப்பந்தம் செய்கிறான், ஆனால் விஷயங்கள் வேறு விதமாக மாறி, மனிதனுக்கு எதிரான இயற்கைப் போராட்டம்தான் படத்தின் மையக்கரு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பாகத்தை காட்டிலும், இரண்டாம் பாகம் மிகவும் அதிகப் பொருட்செலவில் எடுக்க உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, சீக்குவலை விட ப்ரீக்குவல் எடுக்கத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக, கடந்த ஆண்டு ‘காந்தாரா’ படம் வெளியானபோது கொடுத்த நேர்காணல்களில் எல்லாம் இயக்குநர் ரிஷப் ஷெட்டி கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.