"ஜெயா அம்மா (ஜெயலலிதா) அனுபவித்ததை நானும் அனுபவிப்பது போல் உணர்ந்தேன்" என்று கங்கனா ரணாவத் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. பல மிரட்டல் காட்சிகளுடன் இடம்பெற்றிருக்கும் 'தலைவி' ட்ரெய்லர் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவான 'தலைவி' படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று கங்கனா பிறந்தநாளை முன்னிட்டு ட்ரெய்லர் வெளியீடு நடத்தப்பட்டது.
முதலில் சென்னையில் விழா நடத்தப்பட்ட நிலையில், பின்னர் நேற்று இரவு மும்பையில் விழா நடத்தப்பட்டது. இதில் கங்கனா, ஏ.எல்.விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கங்கனா தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பேசினார். "சோஷியல் மீடியா தளங்களில் நான் என்ன சொன்னாலும், அது அரசியலுடன் தொடர்பு கொண்டவை அல்ல. எனக்கு அரசியல் தொடர்புகளும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, அரசியல் உலகம் பற்றி எனக்கு முற்றிலும் தெரியவில்லை.
இன்று என்னை நேரடியாக பாதிக்கும் நாடு, தேசியவாதம், விவசாயிகள் அல்லது சட்டங்களைப் பற்றி நான் பேசுகிறேன். அப்படி பேசியதற்காக நான் ஓர் அரசியல்வாதியாக மாற விரும்புகிறேன் என்று கூறப்பட்டது. அது அப்படி இல்லை. நான் ஒரு குடிமகனாக எல்லாவற்றிற்கும் எதிர்வினையாற்றுகிறேன். எனக்கு அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த விஷயங்களைப் பற்றி பேசும்போது மக்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை.
சிலர் மிகவும் வருத்தப்படுகிறார்கள், நான் ஏன் தேசியவாதம் பற்றி பேசுகிறேன், விவசாயிகள் சட்டம் பற்றி பேச நான் ஏன் மிகவும் கவலைப்படுகிறேன் என்று கேட்கிறார்கள். அதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. அவர்கள் அதைப் பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நான் பேசினால் மட்டும், 'உனக்கு இதை பேச எவ்வளவு தைரியம்' என்று கேட்கிறார்கள்" என்றவர், மும்பையில் சமீபத்தில் அவரின் குடியிருப்பு மாநில அரசால் இடிக்கப்பட்டது குறித்தும் மனம் திறந்தார்.
``எனது குடியிருப்பு இடிக்கப்பட்டபோது நான் 'தலைவி' படப்பிடிப்புக்கு செல்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் 'தலைவி' படத்தின் நாடாளுமன்ற செட் அமைக்கப்பட்டு கொண்டிருந்தது. அதேபோல் நான் தாக்கப்பட்ட நேரத்தில் படத்திலும் ஜெயலலிதா தாக்கப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தோம். நாங்கள் ஒரே நேரத்தில் இந்தக் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தோம். ரீல் மற்றும் நிஜ வாழ்க்கை கலந்திருப்பது போல் இது மிகவும் வினோதமாக இருந்தது. அந்தசமயத்தில் ஜெயா அம்மா அனுபவித்ததை நானும் அனுபவிப்பது போல் உணர்ந்தேன்" என்று கண்ணீர் ததும்ப பேசினார் கங்கனா.
இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், இந்தப் படம் தமிழகத்தில் அரசியல் சர்ச்சையை உருவாக்குமா கேட்டதற்கு, ``இல்லை, நாங்கள் அப்படி நினைக்கவில்லை, ஏனென்றால் எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஜெயா அம்மாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவரது சினிமா அல்லது அவரது தனிப்பட்ட பயணம் மக்களுக்குத் தெரியாது. ஆனால் அவரது அரசியல் பயணம் அனைவருக்கும் தெரியும். இதைப் பற்றி நிறைய பேர் எழுதியுள்ளனர். புகைப்பட மற்றும் வீடியோ சான்றுகள் உள்ளன.
அதேபோல் விஜயேந்திர பிரசாத் சார் எங்களுக்கு ஒரு சிறந்த கதையை வழங்கியுள்ளார். நாங்கள் உண்மையில் யதார்த்தவாதத்துடன் ஒட்டிக்கொள்ள முயற்சித்தோம். ஆனால், ஒரு சினிமா அனுபவத்திற்காக படத்தில் கொஞ்சம் கற்பனைக் காட்சிகள் உள்ளன. எனினும் ஜெயா அம்மாவின் வாழ்க்கையில் நடந்த சில சிறந்த தருணங்களை எங்களால் படம் பிடிக்க முடிந்தது" என்றார் ஏ.எல்.விஜய்