பத்மாவதி திரைப்படம் தொடர்பான பிரச்னையில் தீபிகா படுகோனேவுக்கு உதவ, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறுத்துவிட்டார்.
ராஜபுத்திர வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, பத்மாவதி படத்தை திரையிட நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநில பாஜக தலைவர்களும் இந்தத் திரைப்படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தீபிகா படுகோனே தலையை வெட்டி கொண்டுவருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாகவும் பாஜக தலைவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி, எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்சநீதிமன்ற தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே அமீர்கான் உட்பட பாலிவுட் நடிகர்கள் பலரும் தீபிகாவுக்கு படுகோனேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மி தீபிகாவிற்கு ஆதரவாக, ‘தீபிகாவிற்கு உதவுங்கள்’ என்று மனுவில் பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெற்றுவருகிறார். இதுதொடர்பாக பிரபல பாலிவுட் கங்கனா ரனாவத்தை சந்தித்து, ஷபானி கையெழுத்துயிடும்படி கோரியுள்ளார். அப்போது அமைதியாக இருந்த கங்கானா, கையெழுத்திடவும் மறுத்துவிட்டதாக கூறப்பட்டுகிறது. கங்கானாவின் இந்த செயலால் அதிர்ச்சியுடனும், அதிருப்தியுடனும் ஷபானா அங்கிருந்து சென்றுவிட்டார். சில வருடங்களுக்கு முன் தீபிகா மற்றும் கங்கானாவுக்கு இடையே இருந்த தொழில் கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.