தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக கூட்டிய 20 கிலோ எடையை உடனடியாக குறைக்கும் முயற்சியில் நடிகை கங்கனா ரனாவத் ஈடுபட்டுள்ளார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக அவர் தமிழ் மொழியை கற்றுக் கொண்டதோடு, பரத நாட்டியத்தையும் கற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. அதேபோல், ஜெயலலிதா போன்ற தோற்றத்தை கொண்டு வருவதற்காகவும் கங்கனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதற்காக வெளிநாடுகளுக்கு சென்று முகத்தில் கூட சில மாற்றங்களை செய்து கொண்டார்.
அத்துடன், ஜெயலலிதாவின் உடல் பருமனை கணக்கில் கொண்டு உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். தொடக்கத்தில் தன்னுடைய உடல் எடையில் 10 கிலோவை கங்கனா ரனாவத் அதிகரித்ததாக செய்திகள் வெளியாகின. முதலில் வெளியான தலைவிப் பட புகைப்படம் விமர்சனங்களை சந்தித்த நிலையில், கடைசியாக வெளியான கட்சிப் புடவையுடன் காட்சியளிக்கும் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தலைவி படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த படங்களுக்கான வேலைகளில் கங்கனா ரனாவத் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அதற்காக, தன்னுடைய எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக தலைவிப் படக்குழுவினர் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கங்கனா தன்னுடைய பயிற்சியாளர் யோகேஷை அறிமுகம் செய்துவைக்கிறார். அந்த வீடியோவில், “ஹலோ.. தலைவி படத்திற்கு பிறகு மீண்டும் உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இங்கே என்னுடைய பயிற்சியாளர் யோகேஷ் இருக்கிறார்” என்கிறார் கங்கனா.
மேலும், நான் எத்தனை கிலோ எடை வழக்கமானதை விட கூடியிருப்பேன் என பயிற்சியாளரிடம் கேட்கிறார். “நான் 10 கிலோ என நினைக்கிறேன். வழக்கமாக நான் 52 கிலோதான் இருப்பேன்” என்கிறார் கங்கனா. அதனைத்தொடர்ந்து பேசும் பயிற்சியாளர், 15 கிலோவுக்கு குறைவானதாக இருக்காது என்கிறார். பின்னர், கங்கனா ரனாவத் அங்குள்ள எடை இயந்திரத்தில் தன்னுடைய எடையினை பார்க்கிறார். அதில் 70.3 கிலோ எனக் காட்டுகிறது. தலைவி படத்திற்காக கிட்டத்தட்ட அவர் 18 கிலோ எடையை கூட்டியுள்ளார். எடையை இரண்டு மாதத்தில் குறைத்துவிட முடியுமா என அவர் கேட்க, நிச்சயம் தங்களால் முடியும் என பயிற்சியாளர் கூறுகிறார்.
மேலும், “ஜெயலலிதா வேடத்தில் கச்சிதமாக பொருந்துவதற்காக அவர் 20 கிலோ அளவிற்கு உடல் எடையைக் கூட்டியுள்ளார். ஆனால், இதில் ஆச்சர்யப்பட வேண்டியது என்னவென்றால், அடுத்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்களில் 20 கிலோ வரை உடனடியாக எடையை குறைக்க வேண்டியுள்ளது. அடுத்ததாக தேஜாஸ் என்ற படத்தில் இந்திய விமானப் படை பைலட்டாகவும், தாகட் படத்திலும் நடிக்கவுள்ளார்” என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைவி திரைப்படம் இந்த வருடம் ஜூன் மாதம் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.